Homeசெய்திகள்கட்டுரைசர்வதேச மகளிர் தினம் : பாலின சமத்துவத்தை உறுதி செய்திடுவோம்!

சர்வதேச மகளிர் தினம் : பாலின சமத்துவத்தை உறுதி செய்திடுவோம்!

-

- Advertisement -

சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களுக்கு, உற்ற துணையாக விளங்கிட நாம் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

வருடம் தோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் உலகில் உள்ள பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண் – பெண் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், இரு பாலினத்தவருக்கும் சமமான உலகை உருவாக்கிடும் நெடும் பயணம் குறித்த விவாதிக்க வகை செய்திடும் விதமாகவும் இன்றை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் பண்டைய காலத்தில் மதத்தின் பெயராலும், அறிவியலுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகள், இன்னும் பிற பல்வேறு காரணிகளால் பெண்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வி உரிமை, சொத்து உரிமை சமுதாயத்தில் சமத்துவம் என அனைத்து மறுக்கப்பட்டு, ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு உடைமையாகவே கருதப்பட்டு வந்தனர். ஆனால் கல்வி, அறிவியல் முன்னேற்றம் காரணமாகவும், சர் ராஜாராம் மோகன் ராய், சாவித்ரிபாய் பூலே, பெரியார், அம்பேத்கர் மற்றும் இன்னும் பிற சமுதாய போராளிகளால் அடிமை பட்டுக்கிடந்த இந்திய பெண்கள், தடைகளை தகர்த்து கல்வி, விளையாட்டு, அரசியல், அறிவியல், வணிகம் என பல்துறைகளிலும் முன்னணி பொறுப்புகளில் அங்கம் வகித்து வருகின்றனர்.

"இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்"- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!
File Photo

நாட்டின் முதல் குடிமகளாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு உயர்ந்துள்ளார். இந்திரா காந்தி நாட்டின் பிரதமராகவும், ஜெயலலிதா, சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்சித், மம்தா பானர்ஜி, மாயாவதி, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் மாநிலங்களின் முதலமைச்சராகவும் திறம்பட செயலாற்றி, அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். விளையாட்டுத்துறையில் மேரி கோம், சானியா மிர்சா, மித்தாலி ராஜ், சாய்னா நேவால், பி.வி.சிந்து, மீராபாய் சானு, மனு பாக்கர்  போன்ற எண்ணிலடங்கா சாதனையாளர்கள் தோன்றி, தேசத்தின் புகழை உலக அரங்கில் பறை சாற்றினர்.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலின் திட்ட இயக்குநராக பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த நிகர் ஷாஜி, வானவே எல்லை என்ற தடையை தகர்த்து அண்டவெளி முழுமைக்கும் பெண்களின் ஆதிக்கத்தை நீட்டித்தார். இவை கடந்து தகவல் தொழில்நுட்பத்துறை, பாதுகாப்புத் துறை, திரைத்துறை, மருத்துவம், விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளும் பெண்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குகாக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக பின்தங்கி கிடந்த பெண் சமுதாயம் தற்போது புலி பாய்ச்சலில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

சர்வதேச பெண்கள் தினமான இன்றைய தினத்தில் நாம் ஒரு தந்தையாக, சகோதரனாக, கணவராக பெண்களின் முன்னேற்றத்திற்காக சில உறுதி மொழிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலாவதாக பல்வேறு தடைகளை உடைத்து நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நமது நாட்டின் பெண்களின் மன வலிமையை கொண்டாடுவோம் என்று உறுதி ஏற்போம். பாரம்பரியத்தையும், நவீனத்துவத்தையும் சமநிலைப்படுத்தும் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் அயராத முயற்சிகளை நாம் முழு மனதோடு அங்கீகரிப்போம் என்று உறுதி ஏற்றிடுவோம். நாடு முழுவதும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமை பதவிகளில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம்.

பாதுகாப்பான மற்றும் சமத்துவமான சமூகத்திற்காக பாடுபடுவதன் மூலம் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாகுபாட்டின் தொடர்ச்சியான சவால்களை நாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றிடுவோம். இறுதியாக இந்த சர்வதேச மகளிர் தினத்தன்று, ஒவ்வொரு பெண்ணும் செழித்து தனது கனவுகளை அடையக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்வோம்.

MUST READ