மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ம் தேதி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி மறுசீரமைப்பு, இந்தித்திணிப்பு போன்றவற்றில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் மார்ச் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார். இதேபோல், திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி, விருத்தாசலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, சி.வெ.கணேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்க நினைக்கும் மோடி அரசின் சதியை மக்களிடம் அம்பலப்படுத்திடுவோம் என்றும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், இந்தித் திணிப்பை மேற்கொள்ளும் மோடி அரசின் சதிச்செயலை மக்களிடம் அம்பலப்படுத்திடுவோம் என்றம் திமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.