மொழியின் பெயரால் நாட்டின் பன்முக தன்மையை சிதைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்ச் 8 உலக மகளிர் நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில், சாவித்திரிபாய் ஃபூலே, ரமாபாய் அம்பேத்கர், அன்னை மீனாம்பாள் ஆகிய பெண் ஆளுமைகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் மகளிரை அமைப்பாய் திரட்டி அரசியல் படுத்தி பாலின சமத்துவத்தை வென்றெடுப்போம் என்று கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகளுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மகளிர் யாவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள், பாலின சமத்துவத்தை வென்றெடுக்க இந்நாளில் உறுதி ஏற்போம். மும்மொழிக் கொள்கை பிரச்சனையில் பாஜக தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. மாணவச் செல்வங்கள் இடையே பிஸ்கட், சாக்லேட் கொடுத்து கையெழுத்து வாங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.
வடமாநிலங்களில் மூன்று மொழிக் கொள்கை என்ற பேச்சு இல்லை. தென்னிந்திய மாவட்டங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் மும்மொழி என உயர்த்துவது எந்த வகையிலும் ஏற்புடையாது அல்ல. நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ள மொழி அனைத்து செல்வங்களும் புரிந்துள்ள ஒரு மொழி அத்தகைய மொழியை காலப்போக்கில் சிதைப்பதற்கான முயற்சி தான் இந்தியை கட்டாயமாக்குவது அதற்கு எந்த சூழலிலும் தமிழ்நாடு இடம் கொடுக்காது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்து கொண்டே பாஜகவை சார்ந்தவர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படுவது வன்மையாக கண்டனத்திற்குரியது. மொழியின் பெயரால் நாட்டின் பன்மை துவத்தை சிதைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது.
இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களே தமிழ்நாட்டில் வேலை தேடி வருக்கரர்கள். வேலைவாய்ப்புக்காக வேண்டும் என்ற ஒரு சூழல் இருந்தால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல படிப்பார்கள். அதை யாரும் தடுக்க முடியாது. ஆங்கிலத்தில் வேலைவாய்ப்பு இருப்பதால்தான் அதை அனைவரும் விரும்பி படிக்கிறார்கள். ஆனால் இந்தியை கொள்கையாக வரையறுத்து கட்டாயமாகி அரசு பள்ளியில் திணிப்பதை தான் எதிர்கிறோம்” என தெரிவித்தாா்.