Homeசெய்திகள்கட்டுரைபெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

-

- Advertisement -

குமரன் தாஸ்

 

பெரியார் ஒரு போதும் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக உணர்ந்ததுமில்லை அறிவித்துக் கொண்டதுமில்லை. மேலும் தமிழ்த் தேசியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியத் தேசியர்கள் உள்பட அனைத்துத் தேசியர்களுக்கும். (காந்தி முதல் ம.பொ.சி. வரை) எதிரானவராகத்தான் இறுதிவரை செயல்பட்டுள்ளார். ஆனால் தமிழர்களது நலனுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட்டவரல்ல என்பது மட்டுமல்ல; எந்த இன மக்களுக்கும் எதிரானவரல்ல. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று அவர் சொன்னது எந்தவொரு குறிப்பிட்ட இன மக்களுக்கும் மட்டுமானதல்ல. உலகில் உள்ள அனைத்து  மனித ஜீவன்களுக்கும் பொதுவானதுதான்.பெரியாரும் தமிழ்த் தேசியமும்

அதே சமயம் பெரியாரைத் தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள திமுக, தமிழ்த் தேசியர்களுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிரான கட்சியல்ல. ஆதரவான கட்சியேயாகும் என்பதைவிட தமிழ் இன உணர்வை இங்கு வளர்த்ததும் ஓர் இடதுசாரித் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைத்ததும் திமுகதான் என்று சொல்ல வேண்டும். திமுகவுக்கு முன்பே இங்கு ஒரு தமிழ் மொழி உணர்வும், தமிழ் இன உணர்வும் விதைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது வலதுசாரித் தன்மைகளை உள்ளடக்கியதாக இருந்தது. தமிழ் மொழியுடன் சமயத்தையும் (சைவத்தையும் ) ஜாதியத்தையும் இணைத்த மேட்டிமைத்தன்மை கொண்டதாக அது விளங்கியது.

ஆனால் பெரியார் வழிவந்த திமுகவோ பார்ப்பன, பனியா, வடவர், இந்தி ஆதிக்க எதிர்ப்புடன் தமிழ்ச் சைவ வேளாள உயர் ஜாதி ஆதிக்கத்தையும் எதிர்த்து அடித்தளவர்க்க, ஜாதிகளின் நலனை முன்னிலைப் படுத்திய ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைத்தது. இதன் வெளிப்பாடுதான் தலைவர்கள் முதல் கடைக்கோடியில் வாழும் அடித்தள மக்களது குழந்தைகள் வரை அனைவருக்கும் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டியதும், சூட்டிக்கொண்டதும், வட மொழிக் கலப்பற்ற தனித் தமிழில் எழுதவும் மேடைகளில் முழங்கவும் செய்தது. சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, தாய் மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்தியது. தமிழில் அர்ச்சனை… என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் அரசியல் செயல்திட்டமாகும். ஆம், அது நாள்வரை பெரியாரின் இயக்கம் (தி.க) ஆட்சி அதிகாரத்திற்கு வெளியே நின்று ஓர் சமூக இயக்கமாக, ஓர் அழுத்தக் குழுவாகச் செயல்பட்டு தனது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவும் செயல்படுத்தவும் ஆட்சியாளர்களை நிர்பந்தித்தே வந்தது. தந்தை பெரியாரின் செல்வாக்கும் போர்க்குணமும். ஆட்சியாளர்களைப் பணியவைத்தும் வந்தது. இந்த நிலையில்தான் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக உருவாக்கப்பட்டு தங்களின் (பெரியாரிய) கொள்கைகளை பிறர் கையை எதிர்பார்க்காமல் தாங்களே நிறைவேற்றிக் கொள்வது என்றும் அதற்காக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்றும் முடிவுசெய்து களத்தில் இறங்கியது. ஆனால் தேர்தலில் வெற்றிபெற பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெறவேண்டிய அவசியத்தையும் உணர்ந்தது.பெரியாரும் தமிழ்த் தேசியமும்

இந்த இடத்தில்தான் தந்தை பெரியாரின் கறாரான (ஜாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு) கொள்கைகளை மட்டும் கொண்டு பெரும்பான்மையான வெகுமக்களை ஒரு குடையின் கீழ் திரட்ட முடியாது என்ற நிலையில்தான், வடவர் எனும் புற எதிரியை முதன்மையாக்கி அவ்வெதிரிக்கு எதிராக தமிழ்த் தேசிய அரசியல் கூறுகளான தமிழ் இனம், மொழி, நாடு என்பனவற்றை முன்னிலைப்படுத்தி பெரும்பான்மை மக்களின் செல்வாக்கை திமுக பெற்று வளர்ந்து ஆட்சியையும் கைப்பற்றியது.

இதனைப் பேராசிரியர் சுபவீ அவர்கள் ஓர் எளிய உதாரணம் மூலம் விளக்குவார். தூய தங்கத்தைக் கொண்டு நகை செய்ய இயலாது. அதோடு செம்பு கலந்தால்தான் ஆபரணங்கள் செய்து பயன்படுத்த இயலும். அது போலத் தான் பெரியாரின் கொள்கைகளுடன் தமிழ்த் தேசியக் கருத்தியலை இணைத்து திமுக தலைவர்கள் பிரச்சாரம் செய்து மக்களைத் தம்பக்கம் ஈர்த்து ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெரியார் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினர் என்பார்.

அவ்வாறு அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற திமுக தலைவர்களால் பெரியாரியம் எனும் கசப்பு மருந்தின் மேல் பூசப்பட்டு மக்களுக்குப் புகட்டப்பட்ட இனிப்புதான் தமிழ்ப் பண்பாட்டுப் பெருமித உணர்வாகும். (தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க் கொரு குணமுண்டு, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், இமயத்தில் தமிழ்க்கொடி ஏற்றிய இமயவரம்பன், நீதிக்குப் போராடிய கண்ணகி…) இப்பெருமித உணர்வுகளில் பெரியாருக்கு எப்போதும் உடன்பாடு இருந்த தில்லை. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவற்றை மறுத்தும் எதிர்த்தும் உள்ளார். இந்த முரண்களுடன்தான் தந்தையாகவும் தனயன்களாகவும் பெரியாரும், அண்ணாவும்/கலைஞரும், ஒற்றுமையாக இயங்கியுள்ளனர்.

பெரியாரியம் எனும் மிக உயர்ந்த தத்துவத்தை தமிழ்நாட்டு மக்களின் பின்தங்கிய அகநிலை மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்கு உட்பட்ட ஒரு மாநிலத்தில், தேர்தலில் போட்டியிட்டு வென்று ஜனநாயக முறையில் நடைமுறைப்படுத்துவது என்கிற வரம்புக்குள் நின்றும் பார்ப்பன, பனியா, பண்ணையார்களை எதிர்த்தும் பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த சூழலுக்குள் நடைமுறைப்படுத்த வேறு சில கருத்தியல் ஆயுதங்களைப் (tools) பயன்படுத்த வேண்டியது அவசியமானதாக இருந்தது. அதுவே தமிழ்த் தேசிய அரசியலாகும். இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதற்குமுன் நடந்திராததும் எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாத ஒன்றுமாகும்.

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற முழக்கம் மிகச்சிறப்பாக வேலைசெய்து இந்த வெற்றியை ஈட்டித்தந்தது. வெற்றிபெற்ற பிறகு புற முரண்பாட்டை இரண்டாம் பட்சமாக்கி பார்ப்பன, பண்ணையார் ஆதிக்கத்தை ஒழிப் பது சமூகநீதியை நிலைநாட்டுவது, ஏழை எளிய அடித்தள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது சுருக்கமாகச் சொன்னால் (அக முரண்பாட்டைத் தீர்ப்பது) சமூக ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்வது என்பதை முதன்மைப்படுத்தி வேலை செய்தனர்.

இதன் மூலம் தமிழ்நாட்டை பஞ்சம் பசி பட்டினி இல்லாததும், பார்ப்பன, பண்ணையாதிக்கம் ஒழிந்த சமூகநீதி தழைத்தோங்கிய மாநிலமாக வளர்த்தெடுத்தனர். கூடவே மாநில சுயாட்சி எனும் கொள்கையை முன்வைத்து இந்திய ஒன்றியத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான புற முரண்பாட்டையும் கையாண்டனர். அடுத்து தங்களின் பலத்தின் மூலம் மத்தியில் கூட்டாட்சி எனும் கோட்பாட்டையும் நடைமுறைப்படுத்தி ஒன்றிய அதிகாரத்தில் பங்கேற்றதன் பலனாகத் தமிழ்நாட்டின் நலனை மேலும் வளர்த்தனர்.

இத்தகைய சூழல் மாற்றத்தினால் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற முழக்கம் பொருள் இழந்தது. வடக்கத்தியர்கள் தமிழ்நாட்டை நாடி வந்து பிழைக்கும் அளவுக்கு தமிழ் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. இத்தகைய நிலையில்தான் இப்போதைய ஒன்றிய பாஜக அரசு, தமிழ் நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டி தாம் ஆட்சி செய்யும் வடமாநிலங்களுக்கு அளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பங்கையும் தராமல் துரோகம் செய்கிறது. அதே போல தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு, சட்ட திட்டங்கள் என அனைத்திலும் மூக்கை நுழைத்து அடாவடித் தனம் செய்கிறது. ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கம் நடத்த முற்படுகிறது.

அதனால், இப்போது மீண்டும் தமிழ்த் தேசிய உரிமைக்கான குரல் எழுப்பப்படுவதற்கான நியாயங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ் நாட்டின் பொருளாதாரம், கல்வி, அரசியல், அரசு நிர்வாகம் என அனைத்தின் மீதும் ஒரே நேரத்தில் ஒன்றிய பாஜக அரசும் அவ்வரசின் கைப்பாவையான ஆளுநரும் பல்வேறு விதமான தாக்குதலைத் தொடுத்து வருவதனால் நமது தமிழ்நாட்டின் முன்னேற்றமும், மக்களின் நலனும் பாதிக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறான பாதிப்புகளின் மீது நம் மக்களின் கவனம் திரும்பிவிடாமலும், தம்மைப் பாதிக்கும் பாசிச பாஜகவினரை நோக்கி தமிழ் மக்களின் கோபம் குவிந்துவிடாமலும் தடுப்பதற்காக தமிழ் மக்களுக்குள் தனது கைக்கூலிகள் மூலமாகப் பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்க முனைகிறது.பெரியாரும் தமிழ்த் தேசியமும்நமது மக்களின் உணர்வுகளோடு மிகவும் நெருக்கமான உறவு கொண்டுள்ள ஜாதி, மொழி, பண்பாடு ஆகிய மூன்றையும் முன்னிறுத்தி மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பி தமிழ் மொழியையும், பட்டியல் ஜாதி மக்களையும் மதச்சிறுபான்மையினரையும் பெரியார் இழிவு படுத்திவிட்டதாகச் சீமான் ஒருபுறம் பிரச்சாரம் செய்யும் அதேநேரம், இந்துக் கடவுளர்களை இசுலாமியர்கள் இழிவுபடுத்திவிட்டதாக எச்.ராஜாவும், அண்ணாமலையும், அர்ஜுன் சம்பத்தும் ஆளுக்கொரு திசையில் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டமைத்து வருகின்றனர். எப்படியாவது தமிழ்நாட்டு மக்களைத் திராவிட இயக்கத்திற்கும் தந்தை பெரியாருக்கும் எதிராகக் தூண்டிவிட வேண்டும் என்று பார்க்கின்றனர்.

அதாவது பார்ப்பனர்களின் நலன்களுக்கும் ஆதிக்கத்திற்கும் அடிப்படையாக விளங்கும் உயர்கல்வி ,அரசு அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றை ஏக போகமாகப் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிப்பதற்குப் போட்டியாகப் பார்ப்பனரல்லாத ஜாதியிலிருந்து எவரும் வந்துவிடக்கூடாது என்பதே பார்ப்பனர்களின் ஆசையாகும். ஆனால், அவர்களின் இந்த அநீதியான விருப்பத்தில் மண்ணள்ளிப் போட்டு பார்ப்பனச் சமூக ஏகாதிபத்தியத்திற்குச் சமாதி கட்டும் வேலையை ஒரு நூற்றாண்டு காலமாகத் திராவிட இயக்கம் செய்துவருகிறது.

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

மீண்டும் மீண்டும் பார்ப்பனரல்லாத மாணவர்களைப் படி படி என்று ஊக்கப்படுத்தியும், பல்வேறு வகையில் உதவிகளைச் செய்தும், படித்து முன்னேறி உலகின் பல்வேறு நாடுகளுடன் போட்டி போடுகின்ற அளவுக்கு நமது மாணவச் செல்வங்களை திறனுடையவர்களாக உருவாக்குவதே திராவிட மாடல் ஆட்சியின் இலக்காகவும் சாதனையாகவும் உள்ளது. இப்போது படிப்போடு விளையாட்டுத் துறையிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தி வருவதால் தமிழ்நாட்டு மாணவர்கள் உலக அளவில் சாதனைகளைச் செய்து திரும்புவதைப் பார்க்கிறோம்.

அதேபோல திராவிட மாடல் அரசு தொழிற் துறை வளர்ச்சியில் கூடுதலான அக்கறை கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைப் போட்டு புதிய தொழிற் சாலைகளைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து படித்து முடித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்வதையும் நாம் காண்கிறோம்.

ஆக இன்றைய திமுக அரசின் கவனம் முழுதும் தமிழ்நாட்டை உலகின் பிற நாடுகளுக்கு நிகரான ஒரு முன்னேறிய நாடாக (மாநிலமாக) மாற்றுவதற்கான வேலையில் குவிந்து இருப்பதைப் புரிந்து கொள்கிறோம். இது ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனை, புறக்கணிப்பு, நிதி வழங்காமை போன்ற பல்வேறு நெருக்கடிகளையும் சமாளித்து திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு மேற்கொண்டுவரும் சாதனைகள் ஆகும். இவ்வாறு தமிழ்நாட்டை முன்னேறிய நவீன முதலாளியச் சமூகமாக மாற்றும் வேலைகள் நடைபெறும் அதேநேரம் தமிழ் இனத்தின் பெருமை, தனித்தன்மை, மற்றும் சிறப்பு வாய்ந்த வரலாற்றை ஆதாரப்பூர்வமாகக் கட்டி எழுப்புவதற்கான தொல்லியல் ஆய்வுப் பணிகளையும் அறிஞர் பெருமக்களைக் கொண்டு செய்துவருவதையும் காண்கிறோம்.பெரியாரும் தமிழ்த் தேசியமும்

அதாவது அரசியல் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, பண்பாட்டுத் தளத்திலும் தமிழ்நாடு தனித்து இயங்கும் வல்லமையும் வரலாறும் கொண்டது என்பதை நிலைநாட்டும் வகையில் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவே பாசிசப் பாஜகவானது ஒன்றிய அரசு அதிகாரத்தைத் தனது கையில் வைத்துக்கொண்டு பல்வேறு இடையூறுகளைச் செய்தும் திராவிட மாடல் அரசைப் பணிய வைக்க முடியாத நிலையில் தான் வேறு குறுக்கு வழிகளைத்தேடி தனது கையாட்கள் வழியாகத் தமிழ்நாட்டைச் சீரழிக்கப் பார்க்கிறது.

அந்த வகையில் பார்ப்பனர்கள் இப்போது கண்டடைந்த ஆயுதங்கள்தான் தமிழ்த் தேசியமும், இன மொழி அடையாளமும், அதோடு இணைந்த தமிழ்க்கடவுள்களும் ஆகும். ஆம் எந்த ஆயுதத்தைக் கொண்டு திராவிட இயக்கமும் அதன் தலைவர்களும் பார்ப்பன, பனியா ஒன்றிய அரசையும் அவர்களின் சமஸ்கிருத, இந்தித் திணிப்பையும் எதிர்த்தார்களோ அந்த ஆயுதங்களையே இப்போது பார்ப்பனர்களும் அவர்களது ஏஜெண்டுகளும் கையில் எடுத்துள்ளனர்.

ஆம் தமிழர்களின் மொழிப்பற்றும் இந்தி (திணிப்பு) எதிர்ப்பும் இன்றுவரை உயிர்ப்போடு (இந்தி தெரியாது போடா!) இருந்து வருகிறது. அதாவது தமிழ்மொழி இலக்கியத்தில் உள்ள அவைதீகக் கூறுகளுடைய இலக்கியங்களை (திருக்குறள். முதன்மைப்படுத்தி திராவிட இயக்கம் ஒரு பகுத்தறிவு அடையாளத்தை தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் வழங்கி இந்திக்கு எதிராக நிறுத்தியது. இதன் காரணமாகத்தான் சமஸ்கிருதம், இந்தி ஆகிய வடமொழி இலக்கியத்திற்கு அடையாளமாக பகவத்கீதை மற்றும் கிருஷ்ணன் இராமாயணம் மற்றும் இராமன் போன்ற புராண இதிகாசங்களும் இதிகாசக் கடவுளர்களும் இருப்பதற்கு மாறாகத் தமிழ் நாட்டின் இலக்கியத்திற்கு அடையாளமாக அறத்தைப் போதிக்கும் திருக்குறளும் தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக திருவள்ளுவரும் முன்னிறுத்தப்பட்டதைக் காண்கிறோம்.

இது திராவிட இயக்கத் தலைவர்களின் கடின உழைப்பால் நிறுவப்பட்ட அடையாளமாகும். இந்த அடையாளத்தைச் சிதைத்துத் தமதாக்கி விட வேண்டும் என்றுதான் மோடி முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி வரை திருக்குறளையும் திருவள்ளுவரையும் தங்களின் கையில் எடுத்து திருவள்ளுவருக்கு காவியுடுத்தி ‘தமிழ் இந்து’வாக்கப் பார்க்கின்றனர். ஒரு காலத்தில் தமிழுக்கு எதிராக சமஸ்கிருதத்தையும் (இந்தி), திருக்குறளுக்கு எதிராக மகாபாரதத்தையும், முருகனுக்கு எதிராக கிருஷ்ணனையும்/இராமனையும் உயர்த்திப் பிடித்தவர்கள். இப்போது அவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு தமிழும் ,திருக்குறளும் ,முருகனும் எங்களுடையதுதான் என்று வந்துவிட்டனர்.

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரைத்தவிர மற்ற அனைவரையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டனர். பெரியாரைக் கைவிட்டுவிட்டால் திமுகவையும் ஏற்றுக்கொள்வதாக எச்.ராஜா சமிக்ஞை காட்டுகிறார். ஆடு பகை குட்டி உறவு என்பது போல பெரியார் எதிரி அண்ணா எங்காளு என சீமான் பிதற்றுகிறார். அதாவது உயிரைப் பிரித்துவிட்டு உடலை மட்டும் கேட்கின்றனர். அது ஒருபோதும் நடவாது. தத்துவமற்ற அரசியல் குருட்டுத்தனமானது என்பதை திமுக தலைவர் தளபதி மிகத்தெளிவாகவே அறிந்திருக்கிறார். அதனால்தான் மீண்டும் மீண்டும் அறிவிக்கிறார் பெரியார்தான் எங்கள் தலைவர் ! அவர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களுக்கெல்லாம் தலைவர்! எதிரிகளின் முகத்தில் அறைந்து சொல்கிறார். ஆம் தமிழ்நாட்டின் தந்தை, தலைவர் என்றென்றும் பெரியார்தான்!

மும்மொழிக் கொள்கை – பிச்சைமுத்து சுதாகர்

MUST READ