தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தனது வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் திமுக மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகம் தலைவர் மகளிர் தினத்தை ஒட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற தோற்றத்தை அவர் திருப்பி திருப்பி வலிந்து ஏற்படுத்துகிறார். தமிழ்நாட்டில் குற்றங்களே நடைபெறவில்லை என்று நாம் சொல்லவில்லை. குற்றங்கள் நடைபெறுகின்றன. நாளை விஜயே முதல்வரானாலும் இந்த குற்றங்கள் நடைபெறவே செய்யும். யார் ஆட்சியில் இருந்தாலும் தனிப்பட்ட குற்றங்கள் நடைபெறவே செய்யும். குற்றங்களே நடைபெறாத ஆட்சியை யாராலும் தர முடியாது. ஆனால் நீங்கள் தமிழகத்தில் பெண்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத நிலை உள்ளதாக குற்றம் சாட்டுகிறீர்கள். மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் அப்படி பட்ட நிலைமையா இங்கு உள்ளது?. மணிப்பூர்தான் அப்படி உள்ளது. ஆனால் அது குறித்து நீங்கள் பேச மறுக்கிறீர்கள்.
இந்தியாவில் பெண்கள் வாழ தகுதியான நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக மத்திய பாஜக அரசு சொல்கிறது. அதன்படி தமிழ்நாடுதான் இன்றும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதில் தவெக தலைவர் விஜய்க்கு அப்படி என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. உங்களுடைய வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல. நீங்கள் தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கையை எடுத்துப்பாருங்கள். நாட்டில் எந்த மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகளவில் நடைபெறுகிறது என்று புள்ளி விபரங்களுடன் பேசுங்கள். தவெக நிர்வாகி ஒருவர் சின்ன குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார். இதற்கு மொத்தமாக தவெக-வை பொறுப்பேற்க சொல்ல முடியுமா?
நீங்கள் அஇஅதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தீர்கள். அதற்கு பிறகு அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக எவ்வளவு கொடுமைகள் நடைபெற்றன. சரி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு கொடுமைகள் நடைபெற்றன. அதை என்றைக்காவது கண்டித்துள்ளீர்களா?. செரினா என்ற இளம்பெண், அவர் வீட்டில் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அது நியாபகம் உள்ளதா? அவர் யார்? எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? வீரப்பன் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் வாச்சாத்தியில் காவல்துறை சொல்ல முடியாத அட்டூழியங்களை நடத்தியது. இது குறித்து என்றைக்காவது வாய் திறந்துள்ளீர்களா? பேருந்தில் 3 மாணவிகள் தீ வைத்து எரித்துக்கொன்றார்கள். அதற்கு பிறகுதான் கொஞ்சமும் கூச்சம் இன்றி நீங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தீர்கள். அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளீர்களா?
கலைஞர், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நாட்டிலேயே முதன் முறையாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியவர் கலைஞர். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை முதன் முதலில் அமல்படுத்தியது தமிழ்நாடு. உள்ளாட்சி தேர்தலில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். புதுமைப் பெண் திட்டம், இலவச பேருந்து பயணம் என பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான அரசாக திமுக அரசு உள்ளது. தமிழகத்தில் குற்றங்களே நடைபெறவில்லை என்று நான் சொல்லவில்லை. குறைபாடுகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும். அதற்காக ஆட்சியையே மாற்ற வேண்டும் என்று சொன்னால், இதற்கு முன்னாள் இருந்தவர்கள் என்ன சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளனர்?. இதை விட மோசமான ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகத்தானே நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள்?.
சென்னை, தாம்பரம் போன்ற பெரு நகரங்களின் மேயர்களாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால், அதிகார பரவலாக்கலை இந்த அரசு தானே சாத்தியமாக்கி உள்ளது. வெளி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் சென்னையில் அச்சமின்றி தங்கி பணிபுரிவதற்காக தோழி விடுதிகளை ஏற்படுத்தியது திமுக அரசு. மகளிர் தினத்தன்று பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக, பெண்களே இயக்கக் கூடிய பின்க் ஆட்டோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இப்படி பெண்களின் பாதுகாப்பை அனைத்து இடங்களிலும் திமுக அரசு உறுதி செய்துகொண்டு தானே வருகிறது.
ஆனால் விஜய் எதை கேட்டாலும் மாற்றம் என்கிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்த உடன் எதை மாற்றப் போகிறீர்கள்?. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை மாற்றப் போகிறீர்களா? மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வேண்டாம் என மாற்றப் போகிறீர்களா? உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டாம் என்று மாற்றப் போகிறீர்களா? கல்வியில், வேலைவாய்ப்பில், சுகாதாரத் துறையில் இன்றைக்கு தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. இவற்றை எல்லாம் மாற்றிவிட்டு தமிழ்நாட்டை பின்னால் இழுக்கப் போகிறீர்களா? எதை மாற்றப் போகிறீர்கள். மாற்றம் என்று சொல்லிதான் டெல்லியில் ஒருவரை கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டு இன்றுவரை அழுது கொண்டிருக்கிறோம். மாற்றம் என்று சொல்லி பாஜகவுக்கு வாக்களித்து விடாதீர்கள். அதன் பிறகு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது கடினம் என்று சொன்னோமே யாராவது கேட்டீர்களா? இன்றைக்கு அனைத்து துறைகளையும் பாஜக ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. மாற்றம் என்று சொல்லி பாஜகவை கொண்டு வந்ததன் விளைவை இந்தியாவே அனுபவிக்கிறது. இதேபோல் தமிழ்நாடும் நாளை சீரழிய வேண்டுமா?
விஜய் சார்ந்திருக்கும் திரைத்துறைக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சமீபத்தில் பெரிய சர்ச்சை எழுந்தது. அது குறித்து விஜய் ஏதேனும் கருத்து தெரிவித்தாரா? தவெக சார்பில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் எதற்காக போராடுகிறோம் என்று கட்சியினருக்கே தெரியவில்லை. விஜயின் நடிப்பு அனைவருக்கு பிடிக்கும்தான். அவர் அரசியலுக்கு வருவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அது தமிழ்நாட்டை பல்லாண்டு காலம் பின்னோக்கி இழுத்துச் சென்று விடாதா? இளைஞர்களாகிய நீங்கள் இன்று பார்க்கும் ரீல்ஸ், ஷாட்ஸ், இன்ஸ்டா கிராம் மட்டுமே உலகமில்லை. இதெல்லாம் இன்று வந்தது. இதனை உருவாக்க பெரும் ரத்தத்தை, தியாகத்தை பலர் சிந்தியதால் தான் நமக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. நம் முன்னோர்கள் வாழ்வாதாரம், கல்வி என்னவாக இருந்தது? இன்றையக்கு நம்முடைய வாழ்வாதாரம், கல்வி என்ன? இதை எல்லாம் படியுங்கள். படித்துவிட்டு உங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.