தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடி தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் விண்ணப்பித்தார். அவர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடான வனுவாட்டுவின் குடியுரிமையைப் பெற்றார்.
ஆனால், இப்போது லலித் மோடிக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வனுவாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாட் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். வனுவாட்டு அரசுக்கு லலித் மோடியின் மோசடி செயல்பாடுகள் குறித்து அவர்களுக்குத் தெரியாது.
லலித் மோடிக்கு வழங்கப்பட்ட வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாட் குடியுரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார். லலித் மோடியின் நடவடிக்கையால் வனுவாட்டுவின் கோல்டன் பாஸ்போர்ட் திட்டம் மோசமாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்தது. ஐரோப்பா போன்ற நாடுகள் வனுவாட்டுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி தனது இந்திய குடியுரிமையை கைவிட விண்ணப்பித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘அவர் தனது பாஸ்போர்ட்டை லண்டனில் உள்ள இந்திய உயர் ஆனையரகத்தில் டெபாசிட் செய்ய விண்ணப்பித்துள்ளார். இது தற்போதுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் விசாரிக்கப்படும். அவர் வனுவாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கை சட்டப்படி நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்’ எனத் தெரிவித்து இருந்தார்.
லலித் மோடி 2010 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று, அன்றிலிருந்து லண்டனில் வசித்து வருகிறார். வனுவாட்டு என்பது தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு. இது 83 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம். அவற்றில் 65 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இது ஆஸ்திரேலியாவின் கிழக்கேயும் நியூசிலாந்தின் வடக்கேயும் அல்லது ஆஸ்திரேலியாவிற்கும் பிஜிக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் எஃபேட் தீவில் அமைந்துள்ள போர்ட் விலா.
விசா குறியீட்டின்படி, வனுவாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 56 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.