மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெறுவதற்காக நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டதால், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவை எடுப்பார் என்று என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டில் கூறியிருப்பதாவது:- பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி என்று எல்லவாற்றிலும் ஒற்றைத்தன்மையை கொண்டுவர முயற்சிக்கிறது. ஆனால் இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு ஆகும். மும்மொழி கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல இந்தித் திணிப்பு என்பது ஒரு போர்வைதான். அவர்களது உண்மையான நோக்கம் சமஸ்கிருதத்தை திணிப்பது ஆகும். அண்மை காலமாக பார்த்தால் மத்திய அரசின் அனைத்து சட்டங்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கப்படுகிறது. ஜல்ஜீவன் திட்டம், சமக்ர சிக்ஷா திட்டம் என அனைத்தும் சமஸ்கிருதத்தில்தான் வைத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் சட்டங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நிலைக்குழுவில் நான் ஒரு உறுப்பினராக இருந்தேன் . விவாதத்தின்போது ஆஜராகிய மத்திய உள்துறை அமைச்சக செயலாளரிடம், அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து சட்டங்களையும் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். சட்டத்தின் தலைப்பை ஏன் இந்தியில் எழுதி வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினேன்.அப்போது அவர் அது இந்தி அல்ல சமஸ்கிருதம் என்று பதில் அளித்தார். மும்மொழி கொள்கை வேண்டாம் என்று திமுக மட்டும் சொல்லவில்லை. பல்வேறு மாநிலங்கள் சொல்கின்றன. எந்த வடமாநிலத்தில் மூன்றாவது மொழியாக வேறு எதாவது கற்பிக்கப்படுகிறதா? அல்லது ஆங்கிலமாவது முறையாக கற்பிக்கப்படுகிறதா?
1968-ல் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக்கொள்கை போன்று, தற்போதைய கல்விக்கொள்கை இல்லை என்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை என்பது ஒரு சட்டம் கிடையாது. அது ஒரு பாலிசி. இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லும் பாஜகவினர், புதிய கல்விக்கொள்கையில் பத்தி 4.7ல் சமஸ்கிருதத்தை எவ்வளவு தூரம் வளர்க்க வேண்டும் என்று ஒரு பத்தி முழுக்க சொல்லி வைத்துள்ளனர். அ அப்படி என்றால் இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும்தான் செம்மொழியா? தமிழ் செம்மொழி இல்லையா? திமுக எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்தில் கூட உலக வழக்கொளிந்த ஆரிய மொழி போல் என்ற வார்த்தை, மற்றவர்களுடைய மொழிச் சிந்தனையை பாதிக்கும் என்று நினைத்து கலைஞர் அந்த வரிகளை நீக்கிவிட்டுதான் தமிழ் தாய் வாழ்த்து பாடலை வைத்தார். அந்த அளவுக்கு மற்ற இனங்களை மதிக்கக்கூடிய இனம்தான் தமிழினம். திமுகவினர் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. அரசுப்பள்ளி மாணவர்கள் ஏன் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்?. சிபிஎஸ்இ பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான் அந்த பள்ளிகளுக்கு செல்கின்றனர். இந்தி கற்றுத் தருகிறார்கள் என்பதற்காக சிபிஎஸ்இ பள்ளிக்கு செல்வது கிடையாது.
மும்மொழி கொள்கையை தடுப்பதால் தமிழ் வளர்வதையும் தடுப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. வடமாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில் தமிழ் பயிற்று விக்கப்படுகிறது என்று சொல்லுங்கள். மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கொடுக்க விதிகள் இல்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார். அவருக்கு இது தொடர்பாக சொன்னவர்கள் தவறான அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அது தவறு என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் நிருபிப்போம். மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கான நிதியை பெறுவதற்காக நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டதால் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவை எடுப்பார்.
மத்தியில் பாஜக பெரும்பான்மை உள்ள நிலையில், நாம் நமது கருத்துக்களை சொல்லாமல் இருக்க முடியாது. ஆளுங்கட்சி எவ்வளவு வலிமையாக இருந்தாலும் எங்களது போராட்ட்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும். அண்ணா தமிழ்நாட்டிற்காக நாடாளுமன்றத்தில் பேசிய போது அவர் தன்னந்தனியாக தான் இருந்தார். ஆனால் அவருடைய பேச்சு இன்று வரை பல்வேறு தலைமுறையினரை சென்றடைந்துள்ளது. தந்தை பெரியார் கூட்டங்களில் எத்தனை பேர் பங்கேற்பார்கள். தனி மாநிலமாக தமிழ்நாட்டை வைத்துக்கொண்டு கலைஞர் போராட வில்லையா? எத்தனை பேர் உள்ளோம் என்பது முக்கியம் இல்லை. எங்களை தேர்வு செய்த தமிழக மக்களின் உரிமைக்காக போராடுகிறோமா? இல்லையா? என்பதுதான் பிரச்சினை. திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்தால் எவ்வளவு வலியவர்களாக இருந்தாலும் ஒருநாள் கேட்கத்தான் வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மார்ச் 22ஆம் தேதி அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த உள்ளனர். அதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என்று நேர்மறையான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. இது ஒரு பெரிய கூட்டமைப்பாக உருப்பெறும். நீட் விலக்கு இன்றும் சாத்தியப்படவில்லை தான். ஆனால் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஒரு போராட்டம் என்பது எடுத்த உடனே முடிவு கிடைத்துவிடுவது இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு பிறகு, அது 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் சாத்தியப்பட்டது. இது ஒரு போராட்டம். இந்த போராட்டம் ஒரு முடிவை எட்டும்.ஆனால் அதற்கான காலத்தை நாம் தீர்மானிக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகதான் நாங்கள் போராடுகிறோம். இதனை மத்திய அரசு உணர்ந்துகொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.