உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராம்சேட்டுக்கு இப்போது எந்த அறிமுகமும் தேவையில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது. அல்லது அவருடைய அதிர்ஷ்டம் மாறிவிட்டது என்றும் சொல்லலாம். அவர் தொடர்ந்து மக்களிடமிருந்து ஊக்கத்தைப் பெற்று வருகிறார். இதற்கிடையில், அவர் இப்போது ஒரு புதிய பிராண்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். அவர் ‘ராம்செட் மோச்சி’ என்ற பிராண்டைத் தொடங்கப் போகிறார்.
தனது வெற்றிப் பாதையில் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று ராம்சேட் நம்புகிறார். ராம்சேட்டின் கடைக்கு ராகுல் காந்தி சென்று இருந்தார். அவரது கடையில் ராகுல் காந்தி காலணிகளை வாங்கினார். கடந்த மாதம், ராகுல் காந்தி, ராம்சேட்டை டெல்லியில் உள்ள 10 ஜன்பத்திற்கு அழைத்து, அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்தினார். இந்த நேரத்தில் ராம்செட் தானே தயாரித்த காலணிகளைக் அவர்களுக்கு கொடுத்தார்.
அத்தோடு ராகுல் காந்தி, அவருக்கு காலணிகள் தயாரிக்க உதவும் ஒரு இயந்திரத்தையும் பரிசளித்தார். சமீபத்தில், ராகுல் காந்தி, ராம்சேட்டை மும்பைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சாமர் ஸ்டுடியோ என்ற வடிவமைப்பு பிராண்டை நடத்தும் சுதிர் ராஜ்பரை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இந்த சந்திப்பு 60 வயதான ராம்சேட்டின் மன உறுதியை அதிகரித்தது. இப்போது அவர் தன்னை ஒரு செருப்பு தைப்பவராக அல்ல, ஒரு தொழிலதிபராகப் பார்க்கத் தொடங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவியுள்ள தொழிலதிபர் ராஜ்பரின் யோசனையால் ராம்சேட் முழுமையாக ஈர்க்கப்பட்டதாகத் தோன்றியது. ராம்சேட் இதுகுறித்து, ”ராஜ்பாரின் இடத்தில் புதிய வடிவமைப்புகளைப் பார்த்தேன். அதில் இயந்திரத்தால் செய்யப்பட்ட பைகள், செருப்புகளும் இருந்தன. ராகுல் காந்தியும், சுதிர் ராஜ்பரும் எனது பணியைப் பாராட்டினர். அது என்னை முன்னேறத் தூண்டியது” எனத் தெரிவித்துள்ளார். ராம்சேட் இப்போது தனது மகனுக்கு தனது வேலையில் உதவக் கற்றுக் கொடுத்து வருகிறார். இதன் மூலம் அவர் பிராண்டை உருவாக்கவும் அதை சிறப்பாக நடத்தவும் உதவ முடியும்.
ராகுல் காந்தியைச் சந்தித்ததில் இருந்து அவரது தொழில் வளர்ந்து வருகிறது. இதற்காக அவர் ஒரு கடையையும் வாடகைக்கு எடுத்துள்ளார். அவர் இந்தக் கடையிலேயே இயந்திரத்தைப் பொருத்தியுள்ளார். இப்போது அவர் இங்கே இரண்டு-மூன்று கைவினைஞர்களுடன் பணிபுரிகிறார். அவருடன் சேர்ந்து, அவரது மகனும் இங்கே பயிற்சி பெறுகிறார். முன்பு அவருக்கு ரூ.100-150 மட்டுமே சம்பளம் கிடைத்தது. இப்போது அவரது வருமானம் மாதந்தோறும் ஆயிரங்களை எட்டுகிறது.