Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் – கூட்டுசதி அம்பலம்

தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் – கூட்டுசதி அம்பலம்

-

- Advertisement -

அறப்போர் பத்திரிகை வெளியீடு: உணவுத் துறையில் தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் – மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டணி ஊழல்.தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் – கூட்டுசதி அம்பலம்கடந்த 2024 ஜூன் மாதம் ரேஷன் துறையில் போக்குவரத்து டெண்டரில் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டு சதி செய்து கிறிஸ்டி குமாரசாமி பினாமி நிறுவனங்களாக அறியப்படும் நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பை விட 107% அதிகமாக டெண்டர் வழங்கி ரூ 992 கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளது. இந்த டெண்டர் வழங்குவதற்காக பல சட்டங்களை உடைத்தும் வளைத்தும் மத்திய மற்றும் மாநில அரசு பொது ஊழியர்கள் வேலை செய்துள்ளார்கள். முக்கியமாக பாஜக மீண்டும் 2024 இல் ஆட்சிக்கு வந்து முதல் 1 மாதத்திற்குள் நடந்த மாபெரும் ஊழல்.

இது குறித்த 40 பக்க புகார் மற்றும் 565 பக்க ஆதாரங்களை அறப்போர் இயக்கம் CBI, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, முதல்வர் ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில உணவு துறை அமைச்சர்கள், உணவுத்துறை செயலர்கள், உணவு ஆணையக இயக்குனர், மாநில நிதித்துறை செயலர் என அனைருக்கும் அனுப்பி உள்ளோம்.

ரேஷன் அட்டை வைத்து இருக்கும் மக்கள், எந்நேரம் ரேஷன் கடைக்குச் சென்றாலும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. மாதா மாதம், முதல் 7 நாட்களுக்குள் சென்றால் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றது. இதற்குக் காரணம், அந்தத் துறையில் நடக்கும் பலவிதமான ஊழல்கள். ஏற்கனவே கிறிஸ்டி நிறுவனம் ரேஷன் பொருட்கள் கொள்முதலில் செய்த ரூ.2028 கோடி ஊழலை அறப்போர் இயக்கம் கடந்த 2021ல் வெளியிட்டு அதற்கான புகாரையும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சமர்ப்பித்தது. அது விசாரணையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த முறையும், கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்கள், உணவுத் துறையில் மெகா ஊழலை நிகழ்த்தி உள்ளது.

ஆனால் இந்த முறை, நெல் போக்குவரத்து டெண்டரில் ரூ.992 கோடிக்கு ஊழல் செய்துள்ளது. இதனை செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் துணை சென்றுள்ளன. இதன் விவரங்களை கீழே காண்க. நமது விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை நேரடி கொள்முதல் மையத்தில் அரசு கொள்முதல் செய்த பின்னர், அதனை சேமிப்பு மையத்திற்கு அனுப்பவும், ரயிலில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பவும், பின்பு நெல்லை அரிசியாக மாற்றி அதனை தாலுகா கொள்முதல் மையங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஜூன் 2023ல் ரேஷன் துறை போக்குவரத்து 38 மாவட்டங்களுக்கும் சேர்த்து டெண்டர் விட்டது.

இந்த டெண்டர்கள் கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லப்படும் முருகன் பெயரில் உள்ள முருகா என்டர்ப்ரைஸ்ஸ், கந்தசாமி அண்ட் கோ மற்றும் கார்த்திகேயா என்டர்ப்ரைஸ்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் சந்தை மதிப்பை விட 107% மேலான விலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி அளவில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்புலம் : 2020ஆம் ஆண்டு வரை நெல் போக்குவரத்தை அந்தந்த ஊரில் உள்ள லாரி உரிமையாளர்கள் தான் செய்து வந்தனர். அவர்கள் 5 கிமீ தூரத்திற்கு 1 மெட்ரிக் டன் நெல் போக்குவரத்தை ரூ.200-ரூ.250 கட்டணத்திற்கு செய்து வந்தனர். 2020ஆம் ஆண்டில் அதே நுகர்ப்பொருள் போக்குவரத்திற்கு மாநில அளவில் மையமாக ஒரு டெண்டர் விடப்பட்டு, அந்த டெண்டர் அதே 5கிமீக்கு ஒரு டன்னுக்கு மிக மிக அதிக விலையான கிட்டத்தட்ட ரூ.640 க்கு கிறிஸ்டி ஃப்ரைடு கிராம் குழு நிறுவனமான ஜின்க் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் 5 வருடங்களுக்கு டெண்டர் வழங்கியது.

இத்தனைக்கும், இது வரை போக்குவரத்து செய்து வந்த அதே லாரி உரிமையாளர்களை வைத்து தான் இந்த கிறிஸ்டி நிறுவனம் போக்கு வரத்து செய்தது. இருப்பினும் அவர்களுக்கு அதே ரூ.200-250 அளவில் செலுத்திவிட்டு மீதம் உள்ள ரூ.350-400ஐ கிறிஸ்டி நிறுவனம் அப்படியே கையகப் படுத்திக்கொண்டது. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அறப்போரின் ‘நுகர்பொருள் கொள்முதல் ஊழல்’ புகாரில் கிறிஸ்டியின் இந்த போக்குவரத்து டெண்டரையும் விசாரிக்க சொல்லி கூறி இருந்தோம். அதனைத் தொடர்ந்து இந்த டெண்டர் 3 வருடங்களில் அரசால் ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு இருக்கையில், ஜூலை 2023 முதல் ஜூன் 2025 வரை நெல் மற்றும் தானியங்களை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கு உள்ளும் வெளியும்  போக்குவரத்து செய்வதற்கு ஜூன் 2023ல்  டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் நெல்லை நேரடி கொள்முதல் மையங்களில் இருந்து சேமிப்பு மையங்களுக்கும், அங்கிருந்து உமி நீக்கு மையங்களுக்கும், அங்கிருந்து கிடங்குகளுக்கும் கொண்டு செல்லும் பணிகள் இருந்தன. முதல் 8 கிமீக்கு 1 மெட்ரிக் டன் நெல்லை ஒரு பயணத்திற்கு போக்குவரத்து செய்ய, டெண்டரின் பட்டியல் மதிப்பான ரூ.288ஐ விட ரூ.310 அதிக விலையில் ரூ.598க்கு கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்களாக அறியப்படும் முருகா என்டர்ப்ரைஸ்ஸ், கந்தசாமி அண்ட் கோ மற்றும் கார்த்திகேயா என்டர்ப்ரைஸ்ஸ் ஆகியவற்றிற்கு டெண்டர் வழங்கியது தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம்.

பட்டியல் விலையை விட 107% அதிக விலையில் வழங்கப்பட்ட டெண்டர், இந்த ஒப்பந்தங்களை முடிவு செய்ய மாநிலக் குழு ஒன்று உள்ளது. அதில் மாநில அரசு அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழு தான் டெண்டரின் பட்டியல் விலையை நிர்ணயம் செய்யும். இவர்கள் சந்தை விலையை ஆராய்ந்துதான் இந்த விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதிக விலையில் போக்குவரத்து நிகழ்கிறது என்ற காரணத்திற்காக கிறிஸ்டிக்கு டெண்டர் நிறுத்தப்பட்ட காலம் முதல் இந்த டெண்டர் விடப்பட்ட காலம் வரை அங்குள்ள லாரி உரிமையாளர்கள் 8கிம் தூரத்திற்கு, 1 மெட்ரிக் டன்னை ரூ.330க்கு ஓட்டி வந்துள்ளனர். சந்தை நிலவரத்தை ஆராய்ந்தே இந்த டெண்டருக்கான பட்டியல் விலையை ரூ.288 ஆக நிர்ணயித்த இந்தக் குழு, அதை விட 107% அதிகமாக ரூ.598க்கு ஒப்புதல் கொடுத்தது தான் கூட்டு சதிக்கான முகாந்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊழலுக்காக மாற்றப்பட்ட டெண்டர் விதிகள், மேலும், இந்த டெண்டரில் கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறும் வண்ணம் டெண்டர் விதிகள் வைக்கப்பட்டது. அதாவது, தமிழ் நாடு முழுவதும் லாரி ஓட்டி வந்த எவரும் இந்த டெண்டரில் தேர்ச்சி பெறாத வண்ணம் தகுதி விதிகள் அமைக்கப்பட்டது. டெண்டர் தொகையில் குறைந்த பட்சம் 25% அளவு ஒரு ஒப்பந்தத்திலும் 50% அளவு பல ஒப்பந்தங்களிலும் கையாண்டிருக்கும் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பங்கு பெறலாம் என்ற ஒரு விதியை வைத்து, இது வரை போக்குவரத்து செய்து வந்த எவரும் தொழில்நுட்ப அளவில் தேர்ச்சி அடையாததை உறுதி செய்தனர்.

அது மட்டுமின்றி, கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்கள் தேர்வு ஆக வேண்டி, எந்த ஒரு விற்று முதல் தேவைகளோ வருமான வரி ஆவணங்களோ தேவை இல்லை என்றும், டெண்டர் தொகையில் வெறும் 5% செலுத்தி விட்டால் அனுபவம் இல்லாத எவரும் டெண்டரில் பங்கு பெறலாம் என்ற விதியை உட்புகுத்தி, அவர்கள் தொழில்நுட்ப நிலையில் தேர்ச்சி பெற வழி செய்தனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கிறிஸ்டி பினாமி நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் போட்டி போட தகுதி பெற்றன. இதன் மூலம் ஒப்பந்தங்களில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்ற தமிழ் நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மை சட்டத்தின் முக்கியமான நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநில அளவு டெண்டர் குழுவில் மாநில உணவுத் துறை செயலர் திரு கோபால் IAS  உட்பட அனைவரும் இந்த டெண்டரை கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்களுக்கு வழங்க தயாராக இருந்த நிலையில், மத்திய அரசின் இந்திய உணவு ஆணையத்தின் தென்னிந்திய இயக்குனர் இந்த ஊழலுக்கு துணை போக மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, 2024 பொதுத்தேர்தலில் பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்த காலகட்டத்தில், இந்த ஆணையரை விடுப்பில் செல்ல வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, அவருக்கு அடுத்த அதிகாரியான துணை இயக்குனரை வைத்து இந்த டெண்டரை கிறிஸ்டி பினாமி நிறுவனங்களுக்கு வழங்க இந்தக் குழு ஒப்புதல் வழங்கியதாகவும் தெரிகிறது.

இதன் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசும் மாநில திமுக அரசும் எப்படி கூட்டு சதி செய்து இந்த ஊழலை செய்து உள்ளது என்று பார்க்கலாம். மேலும் கிறிஸ்டி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ 12 கோடிக்கு மேல் பாஜகவிற்கு நன்கொடையாக கொடுத்துள்ளது. முக்கியமாக டெண்டர் வழங்கப்பட்ட ஆண்டில் மட்டுமே 6.2 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த இழப்பு, 107% டெண்டர் பட்டியல் விலையை விட அதிக விலையில் டெண்டர் கொடுத்ததன் விளைவாக, ஒரு மெட்ரிக் டன்னிற்கு ரூ.310 இழப்பு. தமிழ்நாடு அரசு ஒரு வருடத்திற்கு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற மதிப்பீட்டை வைத்துப் பார்த்தால், ஒரு பயணத்திற்கு , ஒரு வருடத்திற்கு ரூ.124 கோடி இழப்பு ஏற்படுகிறது. குறைந்த பட்சம் 4 பயணங்களை கணக்கில் கொண்டால் (கொள்முதல்-சேமிப்பு மையம்-உமிநீக்கு மையம்-ரயில்-கிடங்கு) கூட, ஒரு வருடத்திற்கு ரூ.496 கோடி இழப்பு.

ஆக, 2 வருடங்களுக்கு வழங்கப் பட்ட இந்த டெண்டரினால் அரசுக்கு ரூ.992 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அறப்போர் இயக்கம் மதிப்பிடுகிறது. வெவ்வேறு அனுமானங்களை வைத்துப் பார்த்தல் ரூ.558 கோடி முதல் ரூ.1240 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளன:

விதிமீறல், மேலும், இந்த டெண்டரின் விதிப்படி, துணை ஒப்பந்தங்கள் வழங்கப்பட கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இருப்பினும், கிறிஸ்டியின் இந்த பினாமி நிறுவனங்கள், இது வரை போக்குவரத்து செய்து வந்த அதே லாரி ஓட்டுனர்களை/ உரிமையாளர்களை வைத்து தான் போக்குவரத்து செய்து வந்துள்ளது. இது இந்த நிறுவனங்கள் தரப்பில் நடந்த விதிமீறல்  மட்டும் அல்ல. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நெல்லை உமிநீக்க வேண்டும் என்ற பட்டியலை தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, அவர்களுக்கு போக்குவரத்து பணி செய்த ASPT நிறுவனத்திற்கும் அனுப்பி உள்ளது. இதன்மூலம் அரசும் இந்த விதிமீறலுக்கும் ஊழலுக்கும் துணை போயுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

மேலும் செக்யூரிட்டி டெபாசிட் 5% பணமாக பெற வேண்டும் என்ற விதி இருந்தும் அதை பெறாமலேயே ஒப்பந்தங்களை கிறிஸ்டி குமாரசாமி பினாமி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட டெண்டர் செல்லுபடியாகும் காலத்தை தாண்டிய பிறகும் டெண்டரை விதிப்படி ரத்து செய்யாமல் அதற்கு பணி ஆணை வழக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தின் விரிவான விவரங்களை அறப்போர் இயக்கம் புகார் மற்றும் ஆதார்கங்கள் வழியாக தெரிவித்துள்ளது.

ஊழல் ஒழிப்புச் சட்டம், தமிழ் நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை மட்டுமின்றி டெண்டர் விதிகளையும் பல விதத்தில் மீறி நடந்துள்ளது இந்த ஒப்பந்த ஊழல். இதற்காக, பினாமி நிறுவனங்கள் மூலம் ஊழல் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய கிறிஸ்டி.குமாரசாமி, அவரது பினாமி நிறுவனங்கள் மற்றும் இதற்குத் துணை போன தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், மத்திய அரசு உணவு ஆணையாக பொது ஊழியர்கள் மற்றும் பலர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், இழப்பீடு தொகையை இவர்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். இந்த ஊழல் டெண்டர் உடனே ரத்து செய்யப்பட வேண்டும். சுமார் ரூ.1000 கோடி அரசிடம் இருந்தால், மக்களுக்கு ரேஷன் கடையில் எந்நேரமும் நுகர்ப்பொருள் கிடைக்க வழி வகை செய்யலாம், மேலும் பல குழந்தைகளை படிக்கவும் வைக்கலாம். வெளியில் சண்டை போட்டுக் கொள்வது போல் போட்டுகொண்டு, உள்ளே ஊழல் கூட்டு சதி செய்யும் மத்திய பாஜக அரசு மற்றும் மாநில திமுக அரசை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ஊடக நண்பர்களும் இந்த ஊழலை மக்களுக்கு கொண்டு சேர்த்து, இதனை அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க உரிய அழுத்தத்தை தர வேண்டும்.

தர்மேந்திர பிரதானை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவியுங்கள்: விசிக வலியுறுத்தல்

MUST READ