எல்ஐகே படத்தின் கதை இணையத்தில் லீக்காகி உள்ளது.
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி நானும் ரெளடி தான் என்ற வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் தற்போது எல்ஐகே -(Love Insurance Kompany) எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த பல மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தினை 2025 மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா, பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடித்து வருகிறார் என்றும் இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. இதற்கிடையில் சீமான் தான் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிக்கிறார் என்ற செய்திகள் பரவி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது என்ன மாதிரியான கதை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.