”தேர்தல் ஆணையத்துக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் அளித்து தேர்தல் தேதிதயை முடிவு செய்வுது நல்லதல்ல” என்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கடுமையாக விமர்சித்தார்.
தேர்தல் நடத்தும் செலவு அதிகரித்து வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் சில மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தும்போது தேவையற்ற செலவுகள் தேர்தல் ஆணையத்துக்கு வருவதைக் குறைக்கும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு கொண்டு திட்டமிட்டது.
இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் 2024, டிசம்பர் 17ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியது, இந்த மசோதாவில் உள்ள பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பாஜக எம்.பி. பிபி சவுத்திரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் அமைக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் மக்களவை எம்.பிக்கள் 27 பேரும், மாநிலங்களவையில் இருந்து 12 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டம் நேற்று நடந்துள்ளது. அதில் பல எம்.பி.க்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதில் திமுக மாநிலங்களவை எம்.பி. வி.வில்சன் பேசுகையில் “ புதிய மசோதா பிரிவு 82ஏ(5)ன்படி, எந்த மாநில சட்டமன்றத்திற்காவது தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கருதினால், அந்தத் தேர்தலை பின்னர் நடத்தலாம் என்று குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து அவர் உத்தரவு பிறக்கலாம்” எனத் தெரிவித்தார்
பாஜக மாநிலங்களவை எம்.பி.யும் முன்னாள் தலைமை நீதிபதியுமான ரஞ்சன் கோகய் பேசுகையில் “ தேர்தல் ஆணையத்துக்கு குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்து தேர்தலை நடத்தக்கூற முடியாது. அதேசமயம், தேர்தல் ஆணையத்துக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் அளித்து தேர்தல் பட்டியலை முடிவு செய்ய சொல்வதும் நல்லதல்ல. இந்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள், ஓட்டைகள் உள்ளன. சட்டப்பூர்வமாக இந்த மசோதா ஏற்கத்தக்கதாக இல்லை. ஒரு மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்கவோ அல்லது குறைக்கவோ முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்க முடியாது” என கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி பேசுகையில் “ 1991ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அப்போதைய பிரதமர் சந்திரசேகர், பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி நிறத்திவைத்தார். அதன்பின் 1992ம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடந்தது. தேர்தல் ஆணையம் மத்திய அரசு போல் இல்லை, இதுபோன்ற முடிவு செய்ய அதிகாரங்கள் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து இணையதளத்தை உருவாக்கவும், அதில் மக்களின் கருத்தைக் கேட்கவும் நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது. முன்னாள் குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 80% ஆதரவாக இருந்ததாக கூறப்படுவதற்கு எதிர்க்கட்சி கேள்வி எழுப்பின. இதைத் தொடர்ந்து மக்களிடம் கருத்துக்களைக் கேட்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, அனைத்து பதில்களையும் சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளது.