Homeசெய்திகள்அரசியல்முதல்வர் பதவி… செங்கோட்டையனுக்கு- 3: அண்ணாமலைக்கு -2 வருஷம்; பஜகவின் பகீர் அரசியல்..!

முதல்வர் பதவி… செங்கோட்டையனுக்கு- 3: அண்ணாமலைக்கு -2 வருஷம்; பஜகவின் பகீர் அரசியல்..!

-

- Advertisement -

அதிமுகவில் தனித்து இயங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனின் போக்கு அநாகரீகமானது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சரான வைகை செல்வன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகை செல்வன்,”சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் சந்தித்தது தனிப்பட்ட விஷயம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு செங்கோட்டையன் வரவில்லை. செங்கோட்டையனுக்கு என்ன பிரச்சனை என்பதை அவரிடம்தான் செய்தியாளர்கள் கேட்க வேண்டும்.

அண்ணா திமுக என்பது தொண்டர்களால் இயங்கப்படுகிற ஒரு இயக்கம்.தொண்டர் தொடக்கிய இயக்கத்தில்தான் எம்ஜிஆரே இணைந்து கொண்டார். இதுதான் அதிமுகவின் வரலாறு. அப்படி தோன்றிய இயக்கத்தை தழைக்க வைத்தவர் ஜெயலலிதா. அவருக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி, 4 ஆண்டுகள் 3 மாதம் ஆட்சியில் இருந்தார். இன்று 4 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையிலும் அதிமுகவை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் ஒன்றிரண்டு பூசல்கள் இருக்கும்; கசப்புகள் இருக்கும்; மன வேறுபாடுகள் இருக்கும். ஆனால் இந்த மனவேறுபாடுகளாலும் மன வருத்தங்களாலும் வெளியே போனவர்கள் எப்படிப்பட்ட நிலைக்குப் போனார்கள்? அவர்கள் காணாமலேயே போய்விட்டார்கள்.

சொந்த அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை என்றால் பேசித் தீர்க்க வேண்டும்; உங்களுக்கு அதிமுகவில் ஏதாவது பிரச்சனை என்றால் பொதுச் செயலாளரைத்தான் சந்திக்க வேண்டும். அதைவிட்டு விட்டு பொதுவெளியில் இப்படி நடந்து கொள்வது என்பது அநாகரீகமான செயல். இவ்வாறு வைகை செல்வன் கூறினார்.

sengottaiyan

அதிமுக தற்போதைய பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குரு, கே.ஏ.செங்கோட்டையன். எம்ஜிஆர் காலம் முதலே அதிமுக எம்.எல்.ஏ.வாக தேர்தல்களில் வென்றவர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கியமான துறைகளின் அமைச்சராக இருந்தார்; அதிமுகவிலும் தலைமை நிலைய செயலாளர் முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அண்மை காலமாக அதிமுகவில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார் கே.ஏ.செங்கோட்டையன். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே மேடையில் பங்கேற்பதையும் நேருக்ககு நேர் சந்திக்கக் கூடிய கூட்டங்களையும் தொடர்ந்து செங்கோட்டையன் புறக்கணித்தே வருகிறார். ஆனால் அதிமுக பொதுக் கூட்டங்களில் மட்டும் பங்கேற்கிறார். அந்த கூட்டங்களிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி மட்டும் பேசும் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதும் இல்லை.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு செய்த போதும் தனித்தே செயல்பட்டார். அதிமுகவில் தனித்து செயல்படத் தொடங்கிய செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவையும் தனியே சந்தித்து பேசினார். அதிமுகவினர் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அது நாளை விவாதிக்கப்படும் நிலையில் சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியே சந்தித்தது சர்ச்சையானது. இது தொடர்பான கேள்விகளுக்கும், அவரிடமே போய் கேளுங்க என கடுப்பான குரலில் பதில் தந்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த பின்னணியில் தற்போது செங்கோட்டையனின் செயல்பாடுகளை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் வெளியேற்றப்படலாம் அல்லது வெளியேறலாம் என்கிற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனிடையே சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியதும் அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அதேநேரத்தில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவுக்கு தாவக் கூடும் என்கிற தகவலும் பரவுகிறது.

sengottaiyan

இந்நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையனை முன்னிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் சீனியர் அரசியல் தலைவரான செங்கோட்டையனை, முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், அவருக்காக பிரசாரம் செய்யவும் அண்ணாமலை சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் என ஒரு பிரமாண்டமான அணியை அமைத்து, திமுக கூட்டணியை வீழ்த்த டெல்லி வியூகம் அமைத்துள்ளது.

இந்த பிரம்மாண்ட கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் மூன்று வருட காலத்திற்கு செங்கோட்டையன் முதல்வராக இருப்பார். 2029-ல், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமலுக்கு வருமானால், அந்தத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை முன் நிறுத்தப்படுவார்.இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சககரான அஸ்பையர் சுவாமிநாதன்.

இதற்கு பதிலடி கொடுத்து வரும் அதிமுகவினர், ”அப்போ எடப்பாடி அணி எங்கே போகும் தவெகவுடனா? அப்படி பார்த்தால் தவெக + எடப்பாடி அணி எளிதில் ஆட்சியை பிடித்து விடுமே..! பிஜேபி என்ன சதி செஞ்சாலும் அதை அப்படியே ஏற்க தமிழர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?” என எகிறியடித்து வருகின்றனர்.

MUST READ