நடிகர் மம்மூட்டிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி. அந்த வகையில் 1980களில் மலையாள சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் இவர் நடித்திருந்த தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு ஆகியவை வெற்றி படங்களாக அமைந்தன. அடுத்தது இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேலாக நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் எனும் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து மோகன்லாலுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் மம்மூட்டி. இவ்வாறு தனது 73 வயதிலும் பிசியான நடிகராக வலம் வரும் மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து மம்மூட்டி தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரமலான் நோன்புக்காலம் என்பதால் மம்மூட்டி, நடிப்பில் இருந்து விலகி நோன்பு இருந்து வருகிறார் என்றும் நோன்புக்காலம் முடிந்த பின்னர் மம்மூட்டி மீண்டும் தன்னுடைய படங்களில் நடிக்க தொடங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.