வீர தீர சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்க ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ராவான கல்ட் கமர்சியல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இதன்படி இப்படத்தை இன்று (மார்ச் 27) திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் B4U நிறுவனம் ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வீர தீர சூரன் படத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன்படி இன்று காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம், வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரூ. 7 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் B4U நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் விக்ரம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
இருப்பினும் இந்த பிரச்சனையில் விரைவில் சுமூகத் தீர்வு எட்டப்படும் எனவும் இன்று மாலை முதல் இப்படம் திரையிடப்படும் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன.