Homeதிருக்குறள்81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
        கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

கலைஞர் குறல் விளக்கம்பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
       குப்பாதல் சான்றோர் கடன்

கலைஞர் குறல் விளக்கம்பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.

803. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
        செய்தாங் கமையாக் கடை

கலைஞர் குறல் விளக்கம்பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால். அதுவரை பழகிய நட்பு பயனற்றுப் போகும்.

804. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
        கேளாது நட்டார் செயின்

கலைஞர் குறல் விளக்கம்பழகிய நட்பின் உரிமை காரணமாகத் தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.

805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
        நோதக்க நட்டார் செயின்

கலைஞர் குறல் விளக்கம்வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

806. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
        தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

கலைஞர் குறல் விளக்கம்நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.

807. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
        வழிவந்த கேண்மை யவர்

கலைஞர் குறல் விளக்கம்தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.

808. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
         நாளிழுக்கம் நட்டார் செயின்

கலைஞர் குறல் விளக்கம்நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
        விடாஅர் விழையும் உலகு

கலைஞர் குறல் விளக்கம்தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.

810. விழையார் விழையப் படுப் பழையார்கண்
        பண்பின் தலைப்பிரியா தார்

கலைஞர் குறல் விளக்கம்பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

MUST READ