ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், பாஜகவினர் நீதிபதிகள் குறித்தும், அவர்களது நேர்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் மூலம் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு எதிராக பாஜகவினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அமித்ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும், தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். அவரை அவ்வாறு சவால் விடுக்க வைப்பது பாஜகவினர்தான். தொலைக்காட்சி விவாதங்களில் அந்த கட்சி சார்பில் பங்கேற்று பேசுபவர்கள் திடீரென தொகுதி மறுசீரமைப்பு பற்றி முதலமைச்சர் பேசுகிறார். கனவு ஏதும் கண்டாரா? என கேட்கிறார்கள். தொகுதி மறுவரையறை குழுவை அமைத்து விட்டார்களா? எதற்காக தற்போது இதை பேசுகிறார் என கேட்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு குழுவை அமைத்துவிட்டால், அதன் பணிகளில் யாரும் தலையிட முடியாது.
மக்கள் தொகையை குறைத்ததால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்த இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தனர். இந்த வரையறைக்கு உட்படாமல் ஒரு மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டால், அதற்கு முன்பிறந்த மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்வார்கள். 1971க்கு பிறகு எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தாலும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறைந்துவிடும். இதை அவர்கள் நன்றாக தெரிந்து கொண்டு தான், மக்களை திசை திருப்புவதற்காக அப்படி பேசுகிறார்கள்.
எந்த விஷயத்தை கேட்டாலும், தமிழ்நாடு அரசு மத்திய அரசை கைகாட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தமிழ்நாடு அரசு அப்படி தன்னிடம் என்ன என்ன அதிகாரங்கள் இருக்கிறது என்று சொன்னால் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தை நான் கொடுத்தால் உடனடியாக எனக்கு பணம் வந்துவிடும் என்று சொல்லட்டுமே. அதை ஏன் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அந்த அதிகாரம் யாரிடம் உள்ளது. நீட் தேர்வு வந்தபோது அதை எல்லோரும் ஆதரித்தார்கள். ஆனால் இன்றைக்கு 10 ஆண்டுகளாக நீட் தேர்வு நடந்த நிலையில் நீட் பயிற்சி மையங்கள், அதன் கொடுமைகள், பணத் தேவைகள் மக்களுக்கு தெரிகிறது. பணம் இல்லாமல் ஒருவர் மருத்துவராக வர முடியாது போன்ற நிலைமை உள்ளது. இதை எல்லாம் நிறுத்தக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. அதை அவர்கள் செய்தார்களா? புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் 10 ஆண்டுகளாக கொடுக்கும் நிதியை நிறுத்தி விடுவோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயமானது. அதை நிறுத்தியது மத்திய அரசு தானே.
மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு தன்னுடைய அமைச்சர்களிடம் சொல்வார், எல்லாவற்றுக்கும் மத்திய அரசை குறை சொல்ல வேண்டாம். அவர்கள் கொடுக்க வேண்டிய நிதியை சரியாக கொடுத்துக் கொண்டிருந்தால் நாம் அதை குறை சொல்ல தேவை இல்லை. ஆனால் சட்டப்படி கொடுக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டால், அந்த உரிமைக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். தம்முடைய அரசில் குறையே இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லவில்லை. குறை எங்குள்ளதோ அதை நிவர்த்தி செய்ய முழு முயற்சி எடுப்போம் என்றுதான் அவர் சொல்கிறார். அதை தான் ஒரு அரசு செய்ய முடியும். குறைகளே இல்லாமல் இருக்க முடியாது.
‘
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் 98 சதவீதம் குற்றங்கள் நிரூபிக்கப்பட வில்லை. மத்திய எதிராக பேசும் ஒரு குறிப்பிட்ட நபர் மீது அமலாக்கத்துறை, அவர்கள் வீட்டில் முறைகேடு தொடர்பான ஏதாவது ஆவணங்களை பார்த்தோம் என்று சொல்லிவிட்டு, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தால், அவரது பெயரை கெடுத்ததற்கு யார் காரணமாவார்கள்?. இன்றைக்கு பல வழக்குகளில் அவ்வாறு நடைபெற்றுள்ளது. ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் செய்தவர் என்று அஜித்பவார் மீது குற்றம்சாட்டினார்கள். இன்றைக்கு அவர் ஊழல் குற்றமற்றவர் என்று சொல்கிறார்கள். அசாம் முதல்வர் காங்கிரசில் இருந்ததபோது ஊழல் பழி சொன்னார்கள். பாஜகவுக்கு வந்த உடன் அவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டார்கள். குற்றம் இழைத்தவர்கள் திமுகவில் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி அதிமுக தான் என்று சொன்னவர் அமித்ஷா தான். அப்படி என்றால் அதிமுகவினர் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் ஏன் ஒப்புதல் தர மாட்டேன் என்கிறார். குற்றம் செய்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்களது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக வேலை செய்வது நேர்மையான அரசியலாகாது. அதைதான் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. அதனால் திமுகவை விமர்சிப்பதற்கான யோக்கியதை பாஜகவுக்கு கிடையாது. என்னை போன்ற எத்தனையோ பேர் மத்திய அரசு நிர்வாகத்தில் இருந்து பார்த்திருக்கிறோம். ஆனால் இவ்வளவு கீழ்த்தமான அரசை பார்த்தது கிடையாது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நான் மேற்குவங்க பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தவன். அவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது அவர் என்ன என்ன அட்டூழியங்களை செய்தார் என்று எனக்கு தெரியும். பேட்டையில் சண்டை நடைபெறுவது போல ஆளுநர்கள் நடந்துகொண்டார்கள். ஆர்.என்.ரவியும் அவ்வாறுதான் நடந்துகொண்டார். உச்ச நீதிமன்றம் வேறு வழியில்லாமல் 142 சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அது அரசியல் சட்டப்படி இருக்கிற ஷரத்து. அதை எப்படி அணு ஆயுதம் என்று சொல்ல முடியும்? இவர்களுக்கு ஒன்று நடந்தது என்றால் உடனே கத்துவது என்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
ஆளுநருக்கு எதிராக தீர்ப்பளித்து, எங்களை சீண்டியதால் நீதிபதிகள் குறித்தும், அவர்களது நேர்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்புவோம் என்று சொல்கிறார்கள். எல்லோரும் உச்ச நீதிமன்றம் வேண்டாம். அரசியலமைப்பு சட்டம் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். முன்னுக்கு பின் முரணாக பேசும் ஒரு ஆளுநரின் செயல்பாடுகள் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தால் கவனிக்கப்படும். அதனால் அவர்கள் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் படிதான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். அதை அவர்களால் மறுக்க முடியுமா?
அடுத்து என்ன செய்வார்கள் சட்டப்பிரிவு 142- ஐ நீக்குவதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்குவார்கள். பாஜகவினர் எந்த சட்டத்தை இயற்றினாலும் அது அரசியலமைப்பின்படி உள்ளதா? இல்லையா? என்று சொல்வதற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் தான் உள்ளது. நீதி, நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவை தனித் தனியானவை. நிர்வாகம் ஒரு சட்டத்தை சட்டமன்றத்தில் போட்டிருக்கிறார்கள். அந்த சட்டத்தை நிர்வாகம் சரியாக நடத்துகிறார்களா?. அல்லது சட்டத்தின் ஆன்மா அங்கு மறுக்கப்படுகிறதா? என்று பார்த்து, நிர்வாகத்தின் தலையில் கொட்டு வைக்கிற அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. அதேபோல் ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அந்த சட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு உள்ளதா? என்று கூறும் அதிகாரமும் உச்ச நீதிமன்றத்திற்கு தான் இருக்கிறது. இவர்கள் 142-ஐ நீக்க முயற்சித்தால், அது சட்ட விரோதம் என்று சொன்னால் அதுதான் செல்லும். உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால், அது இந்த நாட்டின் சட்டத்தின் ஒரு பகுதியாகி விடும். இது அவர்களுக்கும் தெரியும். அதனால் உச்சநீதிமன்றத்தை சீண்டி பார்க்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.