அமைச்சர் துரைமுருகன் குறித்து தவறாக சித்தரித்து அவதூறு பரப்பிய நபர் கைது
சமூக வலைதளங்களில் அமைச்சர் துரைமுருகன் குறித்து தவறாக சித்தரித்து அவதூறு பரப்பிய புகாரில் பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 20-வது அணி செயலாளர் அருண்குமாரை காட்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 29-ம் தேதி உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், தன்னுடைய மரணத்திற்கு பிறகு புதைகுழியில் இங்கே கோபாலபுரத்து விசுவாசி உறங்கிறார் என்று எழுதினால் போதும் என்று உருவாக்கமாக பேசினார். இதையடுத்து, சில மர்ம ஆசாமிகள் அமைச்சர் துரைமுருகனின் புகைப்படத்தை கல்லறையில் உள்ளது போன்று சித்தரித்தும், சில வாசகங்களை குறிப்பிட்டும், அதனுடன் ஆடியோ இணைத்து வீடியோவாக சமூக வலைதளமான வாட்ஸாப், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்யக்கோரி காட்பாடி திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 20வது அணி செயலாளர் அருண்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி சென்ற தனிப்படை போலீசார் அருண்குமாரை கைது செய்து, வேலூர் அழைத்து வந்தனர். பின்னர் காட்பாடி நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் அமைச்சர் துரைமுருகன் குறித்து தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகளை நீக்கும் பணிகளை சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.