டோலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் தற்பொழுது ராஜாமௌலி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது மகேஷ் பாபு சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவெலப்பர்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் விளம்பர தூதராக இருக்கிறார். இந்த இரண்டு நிறுவனங்களுமே ஒரே இடத்தை பலருக்கும் விற்று பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் தகுதியே இல்லாத வீடுகளை விற்பனை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த சோதனையின் போது இந்த இரண்டு நிறுவனங்களின் விளம்பர தூதராக மகேஷ் பாபு இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி மகேஷ் பாபுவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர இந்நிறுவனங்களின் திட்டங்களை விளம்பரப் படுத்துவதற்காக நடிகர் மகேஷ் பாபு கிட்டத்தட்ட ரூ. 5.9 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.