கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிருந்தார். அஜித்தை எப்படி எல்லாம் ரசிகர்கள் பார்க்க நினைத்தார்களோ அப்படி எல்லாம் காட்டி முரட்டு ஃபேன் பாய் சம்பவம் செய்திருந்தார் ஆதிக். எனவே இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 140 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் ரூ. 250 கோடியை கடந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த படத்தில் ரீ கிரியேட் செய்யப்பட்ட பழைய பாடல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அதே சமயம், தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக குட் பேட் அக்லி படக்குழுவுக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதை தொடர்ந்து இளையராஜாவின் தம்பியும், பிரபல இயக்குனரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் மேடையில், “என் அண்ணனிடம் அனுமதி கேட்டு இருந்தால் இலவசமாக தந்திருப்பார். எங்கள் பாடல்களால் தான் அந்த படம் ஓடுகிறது. அஜித்தால் அந்தப் படம் ஓடவில்லை” என்று கூறியிருந்தார். கங்கை அமரன் பேசிய இந்த விஷயம் பெரிய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில் இது தொடர்பாக கங்கை அமரனின் மகன் பிரேம்ஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
#Premgi in recent press meet
– My father supports his brother #llaiyaraaja.
– If any problem comes to #VenkatPrabhu, I will support him.pic.twitter.com/lLvrWktkxV— Movie Tamil (@MovieTamil4) April 22, 2025
அதற்கு அவர், “நம்ம எதுக்கு அதெல்லாம் பத்தி பேசிட்டு. காப்பி ரைட்ஸ் பிரச்சனையில் என் அப்பா, அவருடைய அண்ணனுக்கு ஆதரவாக பேசுகிறார். என் அண்ணன் வெங்கட் பிரபுவிற்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நான் அவருக்கு ஆதரவாக பேசுவேன் அல்லவா. அது போல தான்” என்று சொன்னார். அதைத்தொடர்ந்து இளையராஜாவால் தான் அந்த படம் ஓடுகிறது. அஜித்தால் ஓடவில்லை என்று கங்கை அமரன் சொல்லிவிட்டார் என்ற செய்தியாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரேம்ஜி, “அதெல்லாம் சும்மாங்க.. உண்மை என்னன்னு எல்லோருக்கும் தெரியும். தலனால தான் தல படம் ஓடும்” என்று பதிலளித்துள்ளார்.