Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்காதது ஏன்?? - ராமதாஸ் கேள்வி..

தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்காதது ஏன்?? – ராமதாஸ் கேள்வி..

-

- Advertisement -

தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பணியமர்த்தல் ஆணைகளை வழங்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடப் பிரிவுகளுக்கான சிறப்பாசிரியர் பணிகளுக்கு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் பணியமர்த்தல் ஆணை வழங்கப்படவில்லை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும், எந்த காரணமும் இல்லாமல் பணி ஆணை வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

Teachers - ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கு 1325 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வெளியிடப்பட்டு, 2017ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதனடிப்படையில் தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் கடந்த 2019ம் ஆண்டும், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள் 2020ம் ஆண்டும் நிரப்பப்பட்டன.

ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி ஆணை வழங்காமல் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இவ்வளவு நீண்ட தாமதத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்ட போதே, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப் பட்டது.

ஆனால், அதை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்ததையடுத்து தெரிவுப்பட்டியல் கைவிடப்பட்டது. அதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் சரியானவையே. அவற்றை குறை கூற முடியாது. ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டன.

தமிழ்

உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்க முடியும். ஆனால், இரு ஆண்டுகள் ஆகியும் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. தேர்வுகளை எழுதிவிட்டு, அவற்றின் முடிவுகளுக்காக காத்திருப்பதை விட கொடுமையான அனுபவம் வேறு எதுவும் இல்லை.

அதிலும் குறிப்பாக அரசு பணிக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்டு, பணி ஆணை கிடைக்குமா, கிடைக்காதா? என்ற ஐயத்துடனும், குழப்பத்துடனும் வாழ்வது பெரும் தண்டனைக்கு இணையானது ஆகும். அத்தகைய தண்டனையைத் தான் தமிழ்வழியில் படித்த தேர்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருக்கிறது. இதை நியாயப்படுத்த முடியாது. சிறப்பாசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்து விட்டன.

ராமதாஸ்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன. அதன்படி தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், திடீரென ஒரு நாள் அந்தப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டு விட்டது. புதிய பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டால், அதிலும் தங்களின் பெயர் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்தகைய சூழலில் வேறு போட்டித் தேர்வுகளையும் எழுத மனமில்லாமல், ஐந்தாண்டுகளாக தேர்வர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய நிலையில் இருந்து தேர்வர்களுக்கு விடுதலை கொடுக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும். தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்துவிட்டது. இது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. அதனால், தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப் பாசிரியர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட எந்தத் தடையும் இல்லை.

எனவே, தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ