அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்- அண்ணாமலை அதிரடி
தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ள அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திமுகவினரின் சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கை முடிந்தால் சிபிஐக்கு மாற்றி பாருங்கள். பிரதமர் என்னை கர்நாடக தேர்தலை கவனிக்க அறிவுறுத்தினார். அதனால்தான் சென்னைக்கு வரும்போது அவரை நான் சந்திக்கவில்லை. பாஜக தலைவராக இருக்கும்வரை இப்படிதான் செயல்படுவேன். யார் தயவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள்.
’என் மண், என் மக்கள்’ என ஊழலை எதிர்த்து பாத யாத்திரை நடைபெறவுள்ளது. ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. மொத்தமாக எதிர்க்க வேண்டும். எனவே தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும். அடுத்தாண்டுக்குள் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்” எனக் கூறினார்.