மோடியின் கல்வித் தகுதி குறித்து கேட்டால் ரூ.50,000 அபராதம்- எம்பி ஆவேசம்
தமிழர் திருநாள் அன்று 13,000 மாணவர்களை தேர்வு எழுத வைத்தது தான் பிரதமர் மோடியின் தமிழ் பற்றா என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேரடியில் கலை இரவு 23 எனும் தலைப்பில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சொல்லரங்கில் கலந்து கொண்டு பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெல்லியில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார். அதில் அவர் உத்திரமேரூர் கல்வெட்டு பற்றி பேசி இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக கூறினார். உத்திரமேரூர் கல்வெட்டை பொறுத்த வரை தேர்தலில் ஒரு வேட்பாளர் தகுதி எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.
அதன்படி ஒரு வேட்பாளரின் ஒழுக்கம், கல்வி, செல்வம், உள்ளிட்ட நான்கு தகுதிகள் குறித்து அதில் விரிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து கேட்டவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. பிரதமர் மோடி இரண்டு பட்டங்களை பெற்றதாக கூறப்படுகிறது. அதில் அவர் முதுகலை பட்டம் பெற்றதாக கூறப்படும் பல்கலைக்கழகத்தில் அப்படி ஒரு படிப்பே இல்லை. இளங்கலை படிப்பில் அவரது பெயரே அந்த பல்கலைக்கழகத்தில் இல்லை. தமிழ் மொழி போன்ற பண்பட்ட நாகரிகமான மொழி எதுவும் இல்லை என்று மோடி கூறுகிறார்.
தமிழர் திருநாள் அன்று 13,000 மாணவர்களை தேர்வு எழுத அனுப்பியது தான் தமிழ் பண்பாடு மீது மோடி காட்டிய பரிவா? பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கீழடியில் இரண்டரை மீட்டர் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டது. அதனால் 2500 ஆண்டுகள் பழமையான மொழி என்று தமிழை கூறுகின்றனர். அங்கு 15 மீட்டர் தோண்டினால் வேதநாகரிகம் உள்ளே இருக்கிறது. அது 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவித்துள்ளார். மோடி தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு நிலக்கரி சுரங்கங்களை அவருக்கு வாங்கி தந்து வருகிறார். நான் என்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு கீழடிக்கு சென்றதில் என்ன தவறு? எனக் கேள்வி எழுப்பினார்.