பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெறும்
பாடப்புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி குறித்த பாடம் இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை வழக்கம்போல் கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்தார்.
அப்போது பேரவையில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தனது 13 வயது தொடங்கி தமுழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், வரும் கல்வியாண்டில் இருந்து பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற உள்ளது. 9 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெற உள்ளது. தமிழுக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி எனும் தலைப்பில் பாடம் இடம்பெறும்” எனக் கூறினார்.