இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்- மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்கும் வகையில், 2 ஆண்டு காலமாக ஆட்சியை நடத்தி வருகிறோம். மக்களுக்கு நேரடியாக பலன் தரும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை. நாங்கள் தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்களின் மனங்களையும் வென்று அவர்களின் மனங்களில் குடியிருக்கின்றோம். இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது.
மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். ஸ்டாலின் அரசாகவோ, திமுக அரசாகவோ இல்லாமல், ஒரு இனத்தின் அரசாக, கொள்கையின் அரசாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடி இருந்த நிலையிலும், பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து மகத்தான சாதனை புரிந்துள்ளோம். குற்றவாளி யாராக இருந்தாலும் எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவர்களை நாம் நிச்சயமாக காப்பாற்றுவதற்கு உறுதுணையாக இருக்க மாட்டோம்.
தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை. இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன. ஆசிரியராய் இருந்து அவைக்கு தலைமை ஆசிரியராக மட்டுமல்ல, சட்டமன்றத்திற்கு தலைமை ஆசானாக விளங்கி வருகிறார் பேரவைத்தலைவர். பிற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்தது போல சித்தரித்து புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரபப்பட்டன. உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்டு புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்தேன்” என்றார்.