சட்டப்பேரவையில் ஜனநாயகமில்லை- எஸ்பி வேலுமணி
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கவில்லை என எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதாக தகவல் வெளிவருகிறது, அதைப் பிரிக்கக்கூடாது என எதிர்க்கட்சி கொறடா எஸ்பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதன்பின் அவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “35 ஆண்டுகால சட்டப்பேரவை ஜனநாயகத்தை சபாநாயகர் நிலைநாட்டவில்லை. தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்தும் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கவில்லை.
அதிமுக ஆட்சியில் பொது கணக்கு குழு தலைவர் பதவியை பெருந்தன்மையாக துரைமுருகனுக்கு வழங்கினோம். மக்கள் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேரவையில் பேசுவதை நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
மக்கள் பிரச்சனையை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எதிரொலிக்கும். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை சபாநாயகர் இதுவரை அங்கீகரிக்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாததால் முதலமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” எனக் கூறினார்.