Homeசெய்திகள்கட்டுரைஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் - 4

ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் – 4

-

- Advertisement -

ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் – 4

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஆயிரக்கணக்கான மக்கள் படித்துவிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். மின்னஞ்சல் வாயிலும், கைபேசியிலும் , நேரடியாகவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற விழிப்புணர்வு கட்டுரைகளை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.        அவர்களுக்கு நன்றி!

ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும்

அரசியலில் ஒரு அங்கமாக இருக்கும் கொள்கைவாதிகளின் அணுகுமுறை, அவர்களின்  செயல்பாடு அரசியலை மையப்படுத்தியே இயங்குகிறது. அரசியலை மாற்றுவதற்கு சமுதாய அமைப்பை மாற்றினால் போதும் என்பது அவர்களுடைய நிலைப்பாடாக இருந்து வருகிறது.

ஆனால் நான் இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுப்படுகிறேன். எனக்கு இந்த கொள்கை வாதிகளின் ஆர்ப்பாட்டத்தினாலும், போராட்டத்தினாலும் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்ததாக தெரியவில்லை. அப்படியே மாற்றம் ஏற்பட்டாலும் அதனை ஒரு தனிமனிதர் காலப்போக்கில் மாற்றிவிடுவார்.

Avadi Corporation

இந்த சமுதாயத்தை நாம் மாற்ற வேண்டும் என்று விரும்பினால், அந்த மாற்றம் தனி மனிதரிடம் இருந்து தொடங்க வேண்டும். சமுதாயம்  என்பது நான், நீங்கள், மற்றவர்கள் சேர்ந்தது. அதனளவில் “கூட்டம்” அவ்வளவுதான். அதைத்தாண்டி அதைப்பற்றி பேசுவதற்கு பெரியதாக ஒன்றுமில்லை. நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும், பிரச்சனைக்கும் தனி மனிதரைத்தான் எதிர்கொள்கிறோம். அவரிடம்தான் மாற்றத்திற்கான, பரிணாம வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ளது.  தனி மனிதரிடம் மாற்றம் நிகழ்ந்தால், அவரே எழுச்சியை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவராக மாறிவிடுகிறார்.

மனித இனத்தை மாற்றுவதில் எந்த ஒரு கொள்கையும் இதுவரை முழுமையாக வெற்றிப்பெற வில்லை. அப்படியே வெற்றிப்பெற்றதாக கருதப்பட்ட ரஷ்ய நாடு, காலப்போக்கில் தோல்வி அடைந்து விட்டது. ஆனால் நாம் இன்னமும் சமுதாயம் மாற்றம் அடைய வேண்டும் என்றாலும், அதிகார மையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றாலும், அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றாலும் கொள்கைவாதிகளை நம்பிக் கொண்டிருக்கிறோம். கருத்தியல் வாதிகளை தேடிக் கொண்டிருக்கிறோம்.

கொள்கைவாதிகளும், கருத்தியல் வாதிகளும் அரசியல் களத்தில் இறங்கி சமுதாயத்தை மாற்ற போராடுகிறார்கள். பெரும் எண்ணிக்கையில் கூட்டத்தை திரட்டி ஆட்சியை பிடித்து அதிகாரத்தை மாற்றி விடுகிறார்கள். அதிகாரம்  ஊழலுக்கு வழிவகுக்கிறது. தவறு செய்வதற்கு பாதை அமைத்து தருகிறது. முழுமையான அதிகாரம் முழுமையான ஊழலுக்கு அழைத்து செல்கிறது.

தமிழ் நாட்டில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது வெறும் ஆட்சி மாற்றம் தான். அதிமுக அரசுக்கும், திமுக அரசுக்கும் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. பழைய கட்டிடத்தில் வெறும் கதவு, ஜன்னல் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. “திராவிட மாடல்” என்ற வெள்ளை கலரில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான் மாற்றம் அடைந்துள்ளது. அவர்களை பொருத்த வரை மாற்றம் என்பது அவ்வளவுதான். “கவுண்டமணி- செந்தில் காமெடியை போல் அப்படியே முலாயம் பூசன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” என்பார்கள்.  அதுபோல் பழைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆட்சி மாறிவிட்டது, இனிமேல் பாலாறும், தேனாறும் ஓடப்போகிறது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியாளர்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Revolution

மக்களாகிய நாம் தான் மாற வேண்டும், விழிப்புடன் இருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் பேச்சு, நடத்தை, செயலை விழிப்புடன் கவனித்து பாருங்கள். அரசியல் வாதிகள் பேசும்போது எவ்வளவு தந்திரமான வார்த்தைகளை உபயோகப் படுத்துகிறார்கள், எவ்வளவு ஆர்வமுடன் பொதுப் பணியில் செயல்படுகிறார்கள் என்பதை கூர்மையாக கவனித்து பாருங்கள்.  அருகில் நின்று அவர்கள் என்னென்ன பேசுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்பதை கூர்மையாக கவனித்து பாருங்கள்.

அவர்களை மனதளவில் ஆதரித்தோ, எதிர்த்தோ எதவும் செய்யாமல் அமைதியாக கவனித்து பாருங்கள்.  நீங்கள் அமைதியாக, சலனமற்று இருந்தால் மட்டுமே மற்றவர்களின் செயல்பாடுகளை, உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியும். நீங்கள் உங்கள் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு, ஏதோ ஒன்றை கவனித்தால் புரிந்துக் கொள்வது கடினமாக இருக்கும். ”ஒருவரைப் பற்றி  முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய மனம் அதை புரிந்துக் கொள்கின்ற அளவிற்கு தயாராக இருக்க வேண்டும்.”

அரசியல் வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் இந்த மக்களை என்ன சொல்லி ஏமாற்றலாம் என்ற சிந்தனையிலேயே ஐந்து வருடத்தை கடத்துகிறார்கள். மக்களுக்கான நல்லது என்பது அதுவா ஏதாகிலும் நடந்தால் மட்டுமே சாத்தியம். அரசியல்வாதிகளால் எதுவும் நடக்காது.

 

TNHB

 

ஆவடி வீட்டுவசதி வாரியம் 1992- 93 ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. அப்போது லைபரரி, தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், சமுதாயக் கூடம் மற்றும் பேருந்து நிலையம் என்று பல துறைகளுக்கு நிலங்கள் ஒதுக்கினார்கள். ஆனால் ஒதுக்கப்பட்ட நிலத்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அந்தந்த துறைகளுக்கு ஒதுக்காமல் வீட்டுவசதி வாரியம் அப்படியே வைத்திருந்து, தற்போது பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட 1.54 ஏக்கர் நிலத்தை மீண்டும் மனைகளாக பிரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் ஒருவரும் இது தொடர்பாக எதுவும் கண்டு கொள்ளவில்லை. ஆவடி மக்களின்  மீதோ வருங்கால சந்ததியினர் மீதோ அக்கறை உள்ள அரசியல் வாதிகள் ஒருவரும் கூட அதனை கண்டுக் கொள்ளவில்லை.

இது குறித்து ஒரு அரசியல் வாதியிடம் பேசும்போது, ஆவடி வீட்டுவசதி வாரியத்திற்கு பேருந்து நிலையம் எதற்கு என்று கேட்கிறார். இதுதான் ஆவடியில் உள்ள ஒட்டு மொத்த அரசியல் வாதிகளின் சிந்தனையாகவும், மனநிலையாகயாகவும் இருக்கிறது. இவர்களால் இந்த ஊருக்கு, நகருக்கு ஏதாகிலும் மாற்றம் வரும் என்று நம்பிக்கை வைத்தால் நம்மைவிட பைத்தியக் காரர்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

ஆவடி மாநகர் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அடுக்கு மாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதேபோன்று மக்கள் தொகையும் பெருகி வருகிறது. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பேருந்து நிலையங்கள் போதுமானதாக இல்லை. ஆவடி மக்களுக்கு வருங்காலத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அவசியம் தேவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

TNHB AVADI

அடுத்த தலைமுறையினருக்கு இரவும் பகலும் பாராமல் உழைத்து கல்வியை கொடுக்கின்றோம். நல்ல வேலை, வீடு வாசல் அமைத்து கொடுக்கின்றோம். அதேபோன்று அவர்கள் வாழப்போகின்ற நகரில் போதிய வசதிகள் வேண்டாமா? பேருந்து நிலையம் வேண்டாமா? ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி தர வேண்டாமா? இதற்கு மேலாகிலும் விழித்துக் கொள்வோம். அதிகாரிகளை பார்த்து கோரிக்கை வைப்போம், ஆட்சியாளர்களுக்கு விளக்கத்தை கூறி புரிய வைப்போம். பேருந்து நிலையத்தின் இடத்தை பாதுகாப்போம். பாதுகாக்க வேண்டும்!

ஆவடி மக்கள் விழிப்புணர்வு பெற்ற மக்களாக மாறுவது காலத்தின் தேவை. இப்போது நீங்கள் மாறவில்லை என்றால் பின்னர் எப்பொழுதும் மாற்றமடைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் நிறைய வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். அதிகாரத்திற்கு வந்தப் பின்னர் அதிகாரத்தின் மீது அதிகப் பற்றுவைத்து விடுகிறார்கள். அவர்கள் மாறுபட்ட வழியில் செல்கிறார்கள். மக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதில் வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.

(தொடர்ந்து பேசுவோம்)

– என்.கே.மூர்த்தி

இதை படிக்காம போயிடாதீங்க !

MUST READ