மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை – அண்ணாமலை
DMK Files விவகாரத்தில் மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், கனிமொழிக்கு ரூ.830.33 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என திமுக அனுப்பிய நோட்டீஸ்க்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “சட்டத்திற்கு புறம்பாகவோ, அவதூறாகவோ, எதையும் கூறவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே திமுகவின் சொத்துகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. தனது குரலை ஒடுக்குவதற்காக திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.