Homeசெய்திகள்தலையங்கம்12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு 

12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு 

-

12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 12 மணி நேரம் வேலை திட்டத்தை நிறைவேற்றி வரலாற்று பிழை செய்ய இருந்த திமுக அரசு கடைசி நேரத்தில் அந்த பழியில் இருந்து தப்பித்து கொண்டது.

மனிதனை மனிதன் அனைத்து வகையிலும் அச்சுறுத்துவதையும், ஒடுக்கு வதையும் எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் போராடி, வியர்வையும் ரத்தமும் சிந்தி, பல உயிர்களை தியாகம் செய்து பெற்றது தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை.

12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு 

தமிழ்நாட்டில் 1923ம் ஆண்டு மே மாதம் 1ந் தேதி சிங்கார வேலரின் கடும் முயற்சியினால் 8 மணி நேரம் வேலை உரிமையை கொண்டாடினார்கள். வருகிற மே 1ல் அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருந்த தொழிலாளர்களின் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளி போட இருந்த மு.க.ஸ்டாலின் அரசு, கடைசியில் விழித்துக் கொண்டு பெரும் பாவத்தில் இருந்து தப்பித்து கொண்டது.

உலகம் முழுவதும் உள்ள சமுதாய கட்டமைப்பு, மிகவும் மோசமானது மட்டுமல்ல கோடிக் கணக்கானவர்களின் உழைப்பை சுரண்டி வெறும் 10 பேரை மட்டும் வாழவைக்கின்ற விசித்தரமான கட்டமைப்பை கொண்டது. ஒரு பக்கத்தில் தொழிலாளர்களின் ரத்தத்தை உரிஞ்சும் அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். ஆனால் அவர்கள் மலைகளையும், கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தங்களுடைய சொத்தாக மாற்றிக் கொண்ட பெரும் முதலைகள். அவர்களின் பணத்தையும், சொத்தையும் பாதுகாக்கின்ற விசுவாசமான காவலாளியாக அரசாங்கத்தையும், இராணுவத்தையும் மாற்றி வைத்திருக்கும் வல்லமை படைத்தவர்கள்.

12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு 

மறுபக்கத்தில் கோடான கோடி ஏழை மக்கள் நிற்கிறார்கள். வெறும் கையோடு நிற்கிறார்கள். “பத்து விரல்களே எங்கள் சொத்து, உழைப்பே எங்கள் மூலதனம்” என்று எதுவும் சொந்தமில்லாமல் நிற்கதியாக நிற்கிறார்கள். அந்த தொழிலாளர்களிடம் பணத்தை காட்டியும், அரசாங்கத்தின் மூலமாக கட்டாயப் படுத்தியும் பணிந்து போக வைக்கிறார்கள். கெஞ்சி வேலைப் பிச்சை கேட்க நிர்பந்திக்கிறார்கள். வாழ்க்கை நெடுக்கிலும் வேலைப் பிச்சை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

தங்களுடைய உடல் பலத்தையும், உடல் நலத்தையும் முதுகொடிய பாடுப்பட்டு அழித்துக் கொண்டு வருகிறார்கள். பல இடங்களில் உழைப்பிற்கு ஏற்ற சம்பளம் கிடைக்காததாலும், ஒரு வேலை உணவு சாப்பிட்டும் சாப்பிடாமலும் குடும்பத்தோடு பட்டிணி கிடக்கிறார்கள்.

கிடைக்கின்ற சம்பளத்தில் ஒரு பக்கம் கல்வி சுரண்டல், மறு பக்கம் மருத்துவ சுரண்டலுக்கு கொட்டி அழுதுவிட்டு வாழ்க்கையை கண்ணீரோடு கடத்துகிறார்கள். அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் தமிழ்நாடு அரசு மேலும் ஒரு இடியை இறக்கி பார்க்க முயற்சி செய்தது.

12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு 

இப்பொழுது 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் இருந்தும் பல கம்பெனிகளில், வணிக நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய தொழிலாளர்களை நிர்பந்தம் செய்கிறார்கள், கட்டாயப் படுத்துகிறார்கள். அந்த தொழிலாளர்களுக்கு இப்பொழுது உள்ள சட்டம் கை கொடுக்க வில்லை. பாதுகாக்க முன் வரவில்லை. இந்த நிலையில் 12 மணி நேரம் வேலை என்ற சட்டம் அதிகாரப் பூர்வமாக வந்தால் அந்த தொழிலாளர்களின் நிலமை என்னவாகும்? அவர்களின் வேலை 12 மணி நேரத்தில் இருந்து 15 மணி நேரமாகவும்,16 மணி நேரமாகவும் மாறும்.

அதனால் ஓய்வே இல்லாமல் உழைக்கும் அந்த தொழிலாளி மன உளச்சளுக்கு ஆளாகுவான், ஆரோக்கியம் கெடும், அவனை நம்பியுள்ள குடும்பம் பாதிக்கப்படும், குழந்தைகளின் கல்வி கேள்விக் குறியாகும். சமுதாய சீரமைப்பு குளையும், மீண்டும் எல்லோரையும் காட்டுமிரண்டி காலத்திற்கு அழைத்து செல்லும். இந்த பழியைதான் ஸ்டாலின் அரசு சுமக்க இருந்தது. ஆனால் தப்பித்தது.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், ஏழை தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதை உலகமே கண்கூடாக பார்த்து வருகிறது. அதானி குழுமத்திற்காக நாடாளுமன்றம் சில நாட்களாக முடங்கியதை கண்டு உலகமே அதிர்ச்சி அடைந்தது.

12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு 

பாஜக ஆட்சி செய்யும் உத்ரபிரதேசத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவான அனைத்து சட்டங்களையும் நிறுத்தி வைப்பதாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனை தொடர்ந்து மத்தியபிரதேசத்திலும், குஜராத்திலும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றினார்கள். அப்பொழுது 2020-2021ல் தமிழ்நாட்டிலும் அந்த சட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்தார்.

அதனை அன்றைக்கு எதிர்கட்சி வரிசையில் இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது. சட்டப்பேரவையில் தொழிலாளர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதை தடுத்தது. அதே சட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆதரிப்பது தான் வெட்கக் கேடானது.

தொழிலாளர்களுக்கு எதிராக 12 மணி நேரம் வேலை என்ற மசோதாவை சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றிய திமுக அரசை அனைத்து கட்சிகளும் கண்டித்தது.

12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு 

திமுக கூட்டணியில் இருந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. பேரவையில் இருந்து அந்த கட்சிகள் வெளிநடப்பு செய்தது. ஆனால் இவர்களின் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் 12 மணி நேரம் வேலை மசோதாவை நிறைவேற்றினார்கள்.

8 மணி நேரம் வேலை என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கையின் ஆணி வேர். அதுவே அந்த கட்சிகளின் உயிர் நாடி. அதையே அசைத்து பார்க்க நினைத்த திமுகவுடன் இனிமேல் உறவு இல்லை என்ற முடிவிற்கு வந்தனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து திமுக கூட்டணியை விட்டு வெளியேற தயாரானார்கள். அதன் பின்னர் விழித்துக் கொண்ட திமுக அரசு 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் அதன் தொழில் சங்கங்களின் சார்பிலும் மே 12ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அந்த போரட்டத்தை வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் தலைவர் சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் போராடி பெற்ற 8 மணி நேரம் வேலை என்ற உரிமையை ரத்து செய்தது திமுக அரசு தான் என்ற வரலாற்று இழி சொல்லில் இருந்து தப்பித்து கொண்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையை பாராட்டுவோம்.

MUST READ