திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மழை
திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தமிழ்நாட்டில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கில் கிழக்கு தசை மற்றும் மேற்கு தசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வத்தலகுண்டு அருகே காற்றுடன் குடிய மழையின் காரணமாக ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன.
சின்னுபட்டி, ரெட்டியப்பட்டி, கரட்டுப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் வளர்த்த காற்று மற்றும் இடி மின்னலுடன் ஒரு மணி நேரமாக மழை பெய்தது.
அதில் சின்னுபட்டி, ரெட்டியபட்டியை சேர்ந்த ஐந்து விவசாயிகளுக்கு சொந்தமான வாழை மரங்கள் வாழைத்தாருடன் சாய்ந்தன.
அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
இதே போல் பெரிய குளத்தை சுற்றியுள்ள புதுப்பட்டி, தாமரைக் குளம், தேவதானப்பட்டி, வடுகப்பட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குழுமையான சூழல் நிலவியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறுவாச்சூர், கல்பாடி, எறையூர், நத்தக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இதே போல் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களிலும் பெய்த மிதமான மழையால் விவசாயிகள் கோடை உழவுக்கு தயாராகி வருகின்றனர்.
கொடைக்கானலில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்தது. அண்ணா சாலை, மூன்று கல், செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் 100 டிகிரியை தாண்டி கோடை வெயில் சூட்டரித்தது. ஈரோடு மற்றும் கரூரில் நேற்று 101 டிகிரி பாரன்ஹீட்டும், சேலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் வாட்டி வதைத்தது.