சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை 171 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் அல்லது மாதத்திற்கு இருமுறை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த மாதம் (மே ) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி, ரூ. 1,118.50 ஆக நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இந்த மாதமும் குறைந்திருக்கிறது.
கடந்த மாதம் (மார்ச்) வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 223 அதிகரித்து, ரூ. 2,268க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் , ஏப்ரல் மாதம் 76 ரூபாய் குறைந்து ரூ.2,192க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த மாதம் ( மே) 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.171 குறைந்து, 2021.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.