குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000- காங்கிரஸ் வாக்குறுதி
கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், வரி வசூலில் கர்நாடகாவுக்கான பங்கை வழங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும், கூட்டாட்சி தத்துவத்தை நீர்த்துபோக செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்துள்ளது.
இதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம் வழங்கப்படும், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும், டிப்ளமோ முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும், கர்நாடகாவில் கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும், தினமும் பகலில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 8 மணி நேரம் வழங்கப்படும்.
சொட்டு நீர் பாசனத்துக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும், மீனவர்கள் வாழ்வாதாரம் உயர 5 ஆண்டுகளில் ரூ.12,000 கோடி அளவில் நீல பொருளாதாரம் உருவாக்கப்படும். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ.6,000 உதவி தொகை வழங்கப்படும், 1.5 லட்சம் கோடி 5 ஆண்டுகளில் நீர்ப்பாசன துறைக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என கர்நாடக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மேகதாது அணை கட்ட ரூ.9,000 கோடி ஒதுக்கப்படும் எனவும், பால் மானியம் லிட்டருக்கு ரூ.5 லிருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.