கனமழை- அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து இருவர் பலி
பேராவூரணி பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சிக்குட்பட்ட மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் உடையப்பன் (வயது 70). இவரது மனைவி சம்பூரணம் (வயது 62). இவர்கள் இருவரும் உறவினர்கள் அரவணைப்பில் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். உடையப்பனும், சம்பூரணமும் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கும், 100 நாள் வேலைக்கும் சென்று வந்துள்ளனர். பேராவூரணி பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இந்நிலையில் உடையப்பன் வீட்டுவாசலில் சென்ற மின் கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக
உடையப்பன் வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருளில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உடையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். உடையப்பனின் அலறல் சத்தம் கேட்டு அவரை தூக்குவதற்காக வந்த அவரது மனைவி சம்பூரணமும் மின்சாரம் தாக்கி பலியானார். இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அங்கு வந்த பார்த்தபோது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியவந்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட கிராம மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பைத் துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து பேராவூரணி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடையப்பன், சம்பூரணம் ஆகியோரது சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு வந்துள்ளனர். கணவன், மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து மின்சாரத்துறையினர் அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று இரவு அதிராம்பட்டினத்தில் 15 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.