கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது . இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கு வரும் பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராடி வருகிறது. இழந்த ஆட்சியை பெற்றுவிட காங்கிரஸ் கடும் போட்டியில் இருக்கிறது.
இந்த தேர்தலில் அதிமுக முதலில் களம் இறங்கியது. பழனிச்சாமி, பன்னீர்செல்வம் இருவரும் தங்களது வேட்பாளர்களை முதலில் நிறுத்தி பின்னர் வாபஸ் பெற்று விட்டனர்.
இந்த நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது அதிமுக. இதை பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கர்நாடக மாநிலத்தில் அதிமுக செயலாளர் எஸ். டி. குமார் தலைமையில் அவை தலைவர் அன்பரசன், மாநில பொருளாளர் வேடியப்பன் ஆகியோர் நேரில் சென்று கர்நாடகாவில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளித்து விட்டது என்பதை முறைப்படி தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பாஜக இணை பொறுப்பாளரும் ஆன அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரையும் அலுவலகத்தில் சந்தித்து முறைப்படி அதிமுகவின் ஆதரவை பாஜக தலைமைக்கு தெரிவித்துள்ளனர். அப்போது கர்நாடக மாநிலத்தின் அதிமுக செயலாளர் எஸ். டி. குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சால்வை அறிவித்து வரவேற்றுள்ளார்.