மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் மின்சார ஒப்பந்த பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (22). இவர் மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் பழையாறு சுனாமி நகரில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிக்கு பழைய மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்சாரத்தை துண்டித்துக் கொண்டிருந்த போது, அரவிந்த் மீது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த புதுப்பட்டினம் போலீசார் அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.