பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லிக்குளம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து புளியந்தோப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 29 வயதான இந்த வாலிபர் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் . இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் தான் வசித்து வந்த கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அதன் பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நம்பிக்கை மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டில் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டிருந்தார். அதே 2018 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் சதீஷ்குமார் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பின்னர் முறையாக நீதிமன்றத்தின் உத்தரவின் படி நீதிபதி முன்பு ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்து வந்தார் .
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சதீஷ்குமாருக்கு அல்லிக்குளம் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்திருந்த நிலையில் , சென்னை அடுத்த பூந்தமல்லியில் செந்நீர் குப்பம் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ்குமாரை புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவரை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர் போலீசார்.