பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும்- திருமாவளவன்
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பாஜகவுக்கு கர்நாடக மக்கள் கொடுத்த சம்மட்டி அடி. அதிமுக இப்போதே புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் சேர்வதால் அதிமுகவிற்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும். கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பாஜக கடந்த முறை 104 இடங்களில் தனித்து வெற்றி பெற்று இருந்தது. இன்று 72 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். இதன்மூலம் கர்நாடக மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டி இருப்பது தெரிகிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதுபோன்ற நேரங்களில் கட்டுக்கோப்பை மீறி பாஜக உள்ளே நுழைய முயல்கிறது. கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக இருந்து ஆட்சி அமைக்க வேண்டும். பாஜக ஊடுருவ இடம் கொடுக்க கூடாது. பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்படுத்திவிடக்கூடாது. எப்படியிருந்தாலும் இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவுதான்” எனக் கூறினார்.