கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
மேலிட பொறுப்பாளர்கள் விரைவில் பெங்களூரு வந்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதால், அந்த கட்சியினர் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியானது…முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி!
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தவறான அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு கொடுத்த அடி இது. பிரதமர் மோடி, அமித்ஷா பல பாஜக முதலமைச்சர்கள் இங்கே வந்து தங்களின் முழு பலத்தை காட்டினர். ஆனால் மக்கள் பாஜகவை தூக்கி எறிந்துவிட்டடனர். மேலிட பொறுப்பாளர்கள் விரைவில் பெங்களூரு வந்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வார்கள். கர்நாடகாவில் மோசமான ஆட்சி நிர்வாகத்துக்க்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். பிரதமர், உள்துறை அமைச்சர், அமைச்சர்கள் என பாஜக தனது அனைத்து பலங்களையும் பயன்படுத்திய போதும் மக்கள் ஏமாறவில்லை. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றப்பின் அவரது சொந்த மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளார்.” என்றார்.