வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் பத்து விரல்களும் துண்டாகி இருக்கின்றன. பிரபல ரவுடிக்கு இந்த கதி நேர்ந்திருக்கிறது . ஆனால், அவரோ, தன் மீது வீசப்பட்ட வெடிகுண்டை கேட்ச் பிடித்தபோது வெடித்துவிட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன். இந்த வாலிபர் மீது நான்கு கொலை வழக்குகள், ஏழு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 20க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. போலீஸ் ஆவணங்களின் ரவுடி பட்டியலிலும் இவரின் பெயர் இருக்கிறது.
இந்த நிலையில் கலைவாணன் தன் வீட்டின் பின்பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்திருக்கிறார். நாட்டு வெடிண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே அவரின் 10 விரல்களும் துண்டாகி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கால் ,தொடை , உடலின் இதர பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
பயங்கரமாக வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதால் உறவினர்களும் அப்பகுதியினரும் அங்கு திரண்டு வந்து பார்த்தபோது அங்கே கலைவாணன் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
வீட்டின் பின்புறம் சொந்தமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது அந்த வெடிகுண்டு திடீரென்று வெடித்து, விபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில் கலைவாணனோ, போலீசில் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், மர்ம நபர்கள் மூன்று பேர் தன் மேல் நாட்டு வெடிகுண்டை வீசினார்கள் . அதை கையால் கேட்ச் பிடித்து அப்புறப்படுத்த முயன்ற போது வெடித்து விட்டது என்று சொல்லி இருக்கிறார். இதனால் போலீசார் ரவுடி கலைவாணன் வீட்டில் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.