சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் நோயாளி உயிரிழப்பு
கரூர் மாவட்டத்தில் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கெண்டைக்காலில் செல்லும் நரம்பு பகுதியில் ரத்தக்கசிவு நோயால் பாதிப்படைந்து மருந்துகள் எடுத்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக துரைராஜ் உடம்பில் ஹீமோகுளோபின் அளவு குறைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று காலை பத்து மணியளவில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இச்சூழலில் சுயநினைவை இழந்த துரைராஜ் இரவு சுமார் பத்தரை மணியளவில் உயிரிழந்தார்.
மருத்துவ சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி சம்பந்தப்பட்ட மருத்துவர்களை கண்டித்து அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில், உறவினர்கள் கரூர் – திருச்சி நெடுஞ்சாலை காந்திகிராமம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இப்போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தாந்தோணிமலை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதுகுறித்து மருத்துவ அலுவலரிடம் கேட்டபோது, நோயாளி மருந்துகளை எடுப்பதை பாதியிலேயே நிறுத்தியதால் நோயின் நிலைமை அதிகரித்து மோசமான நிலையில் தான் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் எனவும், ஹீமோகுளோபின் அளவு குறைந்ததால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.