கோவை சுற்றுலாவுக்கு வந்த புதுப்பெண் மாயம்
மதுரை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மனோஜ். இவருக்கு வயது 25. இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் மதுரையில் உள்ள தனியார் காலேஜில் பயின்று வரும் தாரணிபிரியா (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இரண்டு பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தேனிலவிற்காக கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி மதுரையில் இருந்து கோவைக்கு வந்தனர்.
கோவை ராம்நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபடி சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். அங்கு இரவில் நடைபெறும் லேசர் ஷோ முடிந்து விபூதி வாங்குவதற்காக மனோஜ் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மனைவி தாரணிபிரியா மாயமாகி இருந்தார்.

அவரை மனோஜ் பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் ஷேர் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மனோஜ் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆலாந்துறை காவல்துறையினரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான தாரணிபிரியாவை தேடி வருகிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்ட பெண் எதற்காக மனோஜிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றார், அவர்களுக்குள் எதாவது சண்டை ஏற்பட்டு கோபத்தில் புறப்பட்டுச் சென்றாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
