ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது. வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. அதன்பேரில் மலர்விழி, தனியார் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் மலர்விழி ஐ.ஏ.எஸ். தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரிலும் சோதனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலர்விழி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 5 இடங்களிலும், புதுக்கோட்டையில் 3 இடங்களிலும், தருமபுரி, விழுப்புரத்தில் தலா ஒரு இடந்த்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.