எஸ்பி வேலுமணி மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்- ஐகோர்ட்
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “சென்னை மாநகராட்சியில் 2018,2019-ல் சாலை மறு சீரமைப்பு, மழைநீர் வடிகால் கட்டமைகளுக்காக 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.300 கோடியில் 3,800 சாலைகள் சீரமைப்பு, ரூ.290 கோடியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. டெண்டர் முறைகேடு மூலம் மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் சுரண்டப்பட்டுள்ளது. டெண்டர் முறைக்கேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதில் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கோர்ட் ஒப்புதலை பெற வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியமைத்தது