பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் நேரில் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘மதுரையில் மாநாடு’, ‘திருச்சியில் மாநாடு’ என்று போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மக்களுக்கு தொடர்ந்து சேவைகள் செய்ய வலியுறுத்தியுள்ளார். மேலும் நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் வெற்றி பெற்றனர். இவ்வாறாக மிக விரைவிலே விஜய் அரசியலில் கால் பதிப்பார் என்று தெரிகிறது.
இந்நிலையில், “ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது!….என்ற தளபதி விஜயின் சொல்லுக்கு இணங்க வருகின்ற ஜூன் 17ஆம் தேதி அன்று சென்னை நீலாங்கரை ஆர் கே மாநாட்டு மையத்தில் 2023 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மற்றும் மாணவியர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் தளபதி விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க உள்ளார்” என விஜய் மக்கள் இயக்க தலைவரான புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.