ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது- செல்லூர் ராஜூ
மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வலையங்குளம் கருப்பசாமி கோயில் மைதானத்தில் நடைபெற்றுவரும் தூய்மை பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மைதானத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில கட்சியின் பிரதிநிதி போல் பேசி வருகிறார். ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது. ஆளுநர் விவகாரத்தில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. ஆளுநராக பேசுகிறாரா? அல்லது வேறு எங்கும் இருந்து அறிக்கை வருகிறதா? என தெரியவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில கட்சியின் பிரதிநிதி போல் பேசி வருகிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் 3-ம் தலைமுறையாக அதிமுகவை ஈபிஎஸ் வழி நடத்தி வருகிறார். மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு மக்களவை தேர்தலுக்கு வெற்றி படிக்கட்டாக இருக்கும். ஆளுங்கட்சியினர் ஆளுநர் பற்றி விமர்சிப்பதையும் ஏற்க முடியாது. ஆளுநர்- ஆளுங்கட்சி மோதலால் மக்கள் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திராவிட இயக்கத்திற்கு தூணாக இருந்தது மதுரை மாவட்டம். மாநாட்டில் அதிமுக தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ள உள்ளனர். அண்ணா காலத்தில் .பழனி மாநாடு திமுகவிற்கு பெரும் திருப்புமுனையாக இருந்தது போல் மதுரை மாநாடு அதிமுகவிற்கு அமையும். 2024 பாராளுமன்ற தேர்தலும் சரி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக மாநாடு வெற்றிப் படிகட்டாக இருக்கும். அண்ணாமலைக்கு பாஜக பெரிய கட்சி, எங்களுக்கு அதிமுக பெரிய கட்சி. அரசியல் கடலில் நீச்சல் தெரிந்தவர்கள் அதிமுகவினர் ஆகையால் தான் அதிமுகவின் தயவு வேண்டும்” எனக் கூறினார்.