சித்தார்த்தின் டக்கர் படத்தின் திரை விமர்சனம்
முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இவருடன் யோகி பாபு, முனீஷ்காந்த், திவ்யன்ஷா கௌஷிக், அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படத்தை ‘கப்பல்’ படத்தின் இயக்குனரான கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கியுள்ளார்.நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்து நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் இன்று திரையில் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் துவக்கத்தில் கிராமத்து சிறுவனாக குணா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சித்தார்த் ஏழையாக பிறந்தாலும் பணக்காரனாக தான் இறக்க வேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கை. எப்படியாவது பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வருகிறார்.
அங்கு ஒரு டாக்ஸி கம்பெனி ஒன்றில் வேலையில் சேருகிறார்.
அதேசமயம் சென்னையில் இளம் பெண்களை கடத்தி அவர்கள் பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் வில்லனாக ராஸ் என்ற கதாபாத்திரத்தில் அபிமன்யூ சிங் நடித்துள்ளார்.
பணக்கார குடும்பத்தில் பிறந்த கதாநாயகி திவ்யன் சா கௌஷிக் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நினைப்பவர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரை வில்லன் குரூப் காரில் கடத்திச் செல்கிறது.
அந்த நேரத்தில் தற்செயலாக சந்திக்கும் கதாநாயகி, கதாநாயகன், வில்லன் மூவரின் வாழ்க்கையிலும் சில திருப்பங்கள் நடக்கின்றன. இதற்குப் பின் சித்தார்த்தின் பணக்காரனாகும் லட்சியம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே டக்கர் படத்தின் கதையாகும்.
பல படங்களில் சித்தார்த் சாக்லேட் பாயாக நடித்து வந்தாலும் இந்த படத்தில் ரக்கட் பாயாக நடித்திருக்கிறார். நடிகை திவ்யன் ஷா இந்த கதைக்கு பொருத்தமானவராக இருந்தாலும் படம் முழுவதும் கிளாமராகவே நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, முனிஷ்காந்த் காமெடி நன்றாக அமைந்துள்ளது. இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை எங்கேயோ கேட்ட மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தியிருநதாலும் கிளைமாக்ஸில் வரும் ‘நிரா நிரா’ பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் இந்த படம் ஒரு கட்டத்தில் ஆக்சன் திரைப்படமாக காட்டப்பட்டால் இன்னொரு கட்டத்தில் காமெடி படமாக காட்டப்பட்டுள்ளது. ஒரு சண்டை அதன் பின் காமெடி அதன் பின்பு ரொமான்ஸ் அதன்பின் பாடல் என தொடர்ந்து இதே வரிசையிலே படம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கதாபாத்திரங்களோடு எந்த விதத்திலும் ஒட்டாமல் திக்கி திணறி நின்றது இப்படத்தின் திரைக்கதை.
பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கும் கதாநாயகன் மற்றும் பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்று நினைக்கும் கதாநாயகி இருவரும் சந்திக்கும்போது வெளிப்படும் சுவாரசியங்களை திரையில் காட்ட தவறிவிட்டது டக்கர் திரைப்படம்.
ஆக மொத்தத்தில் டக்கர் படத்தில் வெறும் டக்கர் மட்டும்தான் இருக்கிறது டாப்பு டக்கர் எதுவும் இல்லை என்று பலர் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.