செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பல்வேறு நிபுணர்கள் குழு கண்காணித்துவருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமலாக்கத்துறை கைதின் போது, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, சிறைத்துறை மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் முடிந்த பின்னர், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது மயக்கவியல் சிகிச்சை தருவதற்கு அவரது உடல் தகுதியோடு இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. இதய சிகிச்சை நிபுணர் ஏ.ஆர் ரகுராம் தலைமையில் மருத்துவர்கள் குழு பல்வேறு பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மூத்த மருத்துவர் ஏ.ஆர். ரகுராம் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக பரிசோதனை நடைபெற்றுவருகிறது. தற்போது செந்தில் பாலாஜி ஐசியூவில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலையை பல்வேறு நிபுணர்கள் கண்காணித்துவருகின்றனர். முழு ஆய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்பில்லை. ஹெப்பரைன் ஊசி, ஆஸ்ப்ரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு 5 நாளுக்கு முன் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த மருந்து மாத்திரைகள் நேற்றுடன் செந்தில் பாலாஜிக்கு நிறுத்தப்பட்டதை அடுத்து, 3 – 5 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்.” எனக் குறிப்பிட்டுள்ளது.