Homeசெய்திகள்அரசியல்திமுக கதறல் - பாஜக கதறல் : யார் யாரை மிரட்டிப்பார்க்க நினைக்கிறார்கள்?

திமுக கதறல் – பாஜக கதறல் : யார் யாரை மிரட்டிப்பார்க்க நினைக்கிறார்கள்?

-

திமுக கதறல் - பாஜக கதறல் : யார் யாரை மிரட்டிப்பார்க்க நினைக்கிறார்கள்?
ஸ்டாலின் அண்ணாமலை

திமுகவை மிரட்டிப்பாக்க நினைக்கிறார்கள் என்று அக்கட்சியினர் ஆவேசப்படுகிறார்கள். பாஜகவை மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள் என்று அக்கட்சியினர் ஆவேசப்பட்டு வருகின்றனர். உண்மையில் யார் யாரை மிரட்டுகிறார்கள் என்று தான் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அரசியல் பழிவாங்கும் படலம் ஆரம்பமாகி இருக்கிறது என்பது மட்டும் அப்பட்டமாக தெரிகிறது. பழிக்குப் பலியாக செந்தில் பாலாஜி எந்த விதத்தில் கைது செய்யப்பட்டாரோ அதே விதத்தில் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் பாஜகவினரின் கதறல் மூலம் தெரிகிறது.

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?
senthilbalaji

அமலாக்கத்துறைக்கு உரிமை இருப்பதாகவும் அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக சொல்லி இருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து, ’’உங்கள் அதிகாரப்படி கைது செய்து இருக்கிறீர்கள். உங்கள் உரிமைப் படி கைது செய்து இருக்கிறீர்கள் என்பதெல்லாம் சரி, ஆனால் கைது செய்த முறை சரியா? அவர் அமைச்சர் அல்லவா? தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி அல்லவா? இதில் பாலாஜி என்பவர் ஒரு தனிமனிதரா? தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஒரு கேபினட் அமைச்சராக இருக்கிற ஒருவர் தாக்கப்பட்டார்; அவமதிக்கப்பட்டார் . நாட்டு மக்களின் மனதையும் தங்களின் பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார்கள் என்று தான் இதற்குப் பொருள் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.

நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு, ‘’பத்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புகாரை வைத்துக்கொண்டு இப்போது விசாரணைக்கு வந்து , ஒரே நாளில் 18 மணி நேரம் விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையை எதற்காக உருவாக்க வேண்டும்? அதற்கான அவசியம் தான் என்ன வந்தது? அமைச்சராக இருக்கின்றவர் ஓடிப் போகப் போகிறாரா? லலித் மோடி , நீரவ் மோடிகளைப் போல ஓடிப் போக போகிறாரா என்ன ?’’ என்று கொதித்தெழுகிறார்கள் திமுகவினர். அதே நேரம், திமுகவை அசைத்துப் பார்க்க நினைக்கிறது பாஜக . இதற்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒரு துருப்புச்சீட்டு என்று கதறுகிறார்கள்.

திமுக கதறல் - பாஜக கதறல் : யார் யாரை மிரட்டிப்பார்க்க நினைக்கிறார்கள்?
எஸ் ஜி சூர்யா

பழிக்குப்பலியாக எஸ். ஜி. சூர்யாவை கைது செய்திருக்கிறது திமுக. அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி கைது செய்து பட்டாரோ அதேபோன்று எஸ். ஜி. சூர்யாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார் . தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவராக உள்ளார் . மதுரை சைபர் கிரையம் போலீசார் இவரை கைது செய்துள்ளது . அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது போலவே இரவோடு இரவாக இவரை கைது கைது செய்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த அண்ணாமலை, ’’இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. சமூகப் பிரச்சனைகளில் திமுக இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்தால், கருத்தால் எதிர்கொள்ள திறனற்ற திமுக எதிர் கருத்துக்களை கூறுபவர்களை கைது செய்து அவர்கள் குரலை முடக்க பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கின்றவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோத போக்கு இந்த தமிழகத்தில் நிலவுகின்றது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இதுபோன்று தொடர்ந்து பாஜக தொண்டர்களை கைது செய்து வைப்பது எதேச்திகாரப் போக்கு. இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல் எப்போதும் துணிச்சலாக ஒலித்துக் கொண்டிருக்கும் ’’என்கிறார்.

அரசியல் சட்டப்படி யாரை விசாரிக்க வேண்டும், யாரை கைது செய்ய வேண்டும் என்ற அதிகாரம் அமலாக்கத்துறைக்கு தான் உள்ளது. அதில் தலையிட முதல்வருக்கும் அதிகாரம் இல்லை. என்கிறது பாஜக. அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு, ‘’திமுகவை சீண்டாதீர்கள்’’ என்று முதல்வர் சீற்றம் கொண்டதற்கு, பாஜக இந்த பதிலை தந்திருந்தது.

திமுக கதறல் - பாஜக கதறல் : யார் யாரை மிரட்டிப்பார்க்க நினைக்கிறார்கள்?
நாராயணன் திருப்பதி

எஸ். ஜி. சூர்யா கைது பற்றி தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ’’எந்தவிதமான நோட்டீஸ் வழங்காமல் காவல்துறை சூர்யாவை கைது செய்திருக்கிறது. கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசனை நோக்கி நடந்த உண்மை சம்பவம் பற்றி கேள்வி கேட்டதற்காக இந்த கைது நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்கு போடுகின்றார்கள்.

திமுக அரசு காவல்துறையைக் கொண்டு பாஜகவை மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் . திமுக தங்களின் தவறை உணர வேண்டும். செந்தில் பாலாஜி எத்தனை கோடி ஊழல் செய்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்திருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது தவறான நடவடிக்கை எடுத்தால் பாஜக யார் என்பதை திமுகவிற்கு உணர்த்த நேரிடும். செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை தொடக்கம் தான் . பாஜகவை சீண்டினால் அதற்கான பலனை நிச்சயம் திமுக அனுபவிக்கும்’’ என்று எச்சரிக்கிறார் .

senthilbalaji

வருமான வரித்துறையினரை, அமலாக்கத் துறையினரை வைத்து திமுகவை மிரட்ட பார்க்கிறார்கள் என்று பாஜக மீது திமுக குற்றம் சாட்டி வர, காவல்துறையைக் கொண்டு பாஜகவை மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள் என்று திமுக மீது பாஜகவினர் குற்றம் சாட்டி வருவது , தமிழக அரசியலில் பழிவாங்கும் படலம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

MUST READ