தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கான்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இவ்விழாவில் தளபதி விஜய் சுமார் 1500 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கல்வி விருது, ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் மாணவர்களிடம், பாட புத்தகங்களை தாண்டி பெரியார் காமராஜர் அம்பேத்கர் போன்ற பல தலைவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் பல நற்குணங்களையும் சிந்தனைத் திறன்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மாணவ மாணவியர்களும், அவரவர் பெற்றோர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என கூறுங்கள் என்று பேசியிருந்தார்.
இது குறித்து இயக்குனர் கரு பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” விஜயின் இன்றைய பேச்சு வரவேற்புக்குறியது. ஆன்மீக அரசியல் என்று சொல்லாமல் அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என்றார் அதை படித்தாலே சரியாக வாக்களித்து விடுவார்கள்…. நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.