வீட்டு வேலை சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்பு
சென்னை மதுரவாயல் அருகே வீட்டு வேலை செய்ய சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் இருந்து 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் 1-வது தெருப்பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது சுமார் ஆறு வீடுகள் கொண்ட இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளில், ஓட்டு மொத்தமாக ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலா (வயது 52) என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அதனுடன் சேர்த்து வண்டி நிறுத்துமிடம், மொட்டை மாடி உள்ளிட்ட பகுதிகளை சுத்தம் செய்வதை வேலையாக செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று இவருடைய 2 மகள்கள் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாய் காணவில்லை என மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இன்று மாலை 7 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனை அடுத்து அது தொடர்பாக குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியை திறந்து பார்த்த போது அதில் இறந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பது தெரியவந்தது.
அந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது அது வீட்டு வேலை செய்து வந்த கலா என்பது தெரிய வந்தது. மேற்கொண்டு உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு வேலை செய்ய கலா வந்ததாகவும் அதன் பின் இரண்டு நாட்களாக வரவில்லை எனவும் ஏதோ வேலை காரணமாக தான் கலா வரவில்லை என அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களும் நினைத்துள்ளனர். ஆனால் இன்று தொட்டியில் இருந்து துர்நாற்றம் வருவதை அடுத்து, கழிவு நீர் தொட்டியின் அருகே சுத்தம் செய்யும் போது தவறி விழுந்து கலா இறந்துள்ளார் என்பது அடுத்த குடியிருப்பவர்களுக்கும் தெரியவந்துள்ளது.