தமிழ் சினிமா ரசிகர்களிடம் எப்பொழுதுமே மலையாள சினிமாக்களுக்கு என ஒரு தனி மவுசு உண்டு. எனவே மலையாள மொழிகளில் ரிலீசாகும் தரமான படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன.
சினிமாவுக்கு மொழி ஒரு தடையில்லை என்பது போல நல்ல சினிமாவை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் வேற்று மொழி நடிகர்கள் தமிழிலும் தமிழ் நடிகர்கள் வேற்று மொழிகளிலும் நடிப்பது மிக சாதாரணமாகிவிட்டது.
குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. மோகன்லாலின் சிறு சிறு முக பாவனைகள், எமோஷனல் ஆக்டிங் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றது. இவர் நடிப்பில் வெளியான திரிஷ்யம் ,லூசிபர் திரிஷ்யம் 2போன்ற படங்களும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தன.
மோகன்லாலைத் தொடர்ந்து அவருடைய மகனான பிரணவ் மோகன்லாலும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஹிருதயம் திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
மேலும் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.
பிரணவ்வைத் தொடர்ந்து மோகன்லாலின் உடன் பிறந்த தங்கை மகனான நிகிலும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது நிகில் நாயர் ஒரு தமிழ் படத்தில் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தை தொட்டி ஜெயா ,என்னமோ நடக்குது ,சக்கரகட்டி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜூட் ரோமரிக் இயக்குகிறார். படத்தின் டைட்டில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. நகைச்சுவை பின்னணியில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகளும் விரைவில் பட குழுவால் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.